×

ஏன்? எதற்கு?எப்படி?

?குடும்ப ஒற்றுமை நிலவ எந்த கடவுளை வணங்க வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, சோமாஸ்கந்தரை வழிபடுவது நல்லது. திங்கட்கிழமை தோறும் பால் நிவேதனம் செய்து, சோமாஸ்கந்தரை வழிபடுவதோடு, அந்த பால் பிரசாதத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பருகி வர, குடும்பத்தில் ஒற்றுமை என்பது நிலவும்.

?சனிக்கிழமை வரும் பிரதோஷத்திற்கு அப்படி என்ன மகிமை இருக்கிறது? விளக்கம் தர முடியுமா?
– வண்ணை கணேசன், சென்னை.

எல்லாவிதமான தோஷத்தையும் போக்குகின்ற காலமே பிரதோஷ காலம். அத்துடன், பரமேஸ்வரன் முழுமையான சந்தோஷத்துடன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையே காட்சி தரும் காலம் என்பதால்தான், நந்திக்கு அத்தனை சிறப்பான அபிஷேகங்கள் பிரதோஷ நேரத்தில் செய்யப்படுகிறது. அதிலும் சனிக்கிழமை நாளில் பிரதோஷம் என்பது, இணையும் சனிபிரதோஷ நாளில் இறைவனை வழிபடும்போது சனியால் உண்டாகக்கூடிய தடைகள், இடைஞ்சல்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, முழுமையான சந்தோஷம் என்பது கிடைக்கும் என்பதால், சனிபிரதோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். சனிபிரதோஷத்தைப் போலவே, சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை நாளில் பிரதோஷம் இணைகின்ற சோமபிரதோஷமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

?கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது இறைவன் பெயரில் செய்யலாமா? அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்யலாமா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

“லோகா சமஸ்தா சுகினோ பவந்து’’ என்பதை நினைவில் கொண்டு, இந்த உலகத்தில் வாழும் மக்கள் மாத்திரமல்ல, அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் “சமஸ்த லோகே ஜனானாம் ஸர்வேஷாம் க்ஷேமஸ்தைர்ய, வீர்ய விஜய, அபய, ஆயுர் ஆரோக்ய, ஐஸ்வர்யானாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம்’’ என்ற சங்கல்பத்துடன் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படித்தான் ஆறு கால பூஜைகளிலும் ஆலய அர்ச்சகர்களால் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று ஆகம விதிகள் சொல்கின்றன. தனிப்பட்ட முறையில் ஒருவரது பெயரில் அர்ச்சனை செய்வது என்பது ஆகம விதிகளில் இல்லை. அரசனின் பெயரில் மட்டும் அர்ச்சனை செய்யலாம் என்ற விதி உண்டு. =காரணம், அரசன் என்பவன் மக்களின் பிரதிநிதியாகவும், அந்த மக்களுக்கு பணி செய்ய ஆண்டவனால் அனுப்பப்பட்ட பணியாள் என்பதாகவும், கருதப்பட்டது. அரசனின் பெயரில் அர்ச்சனை செய்யும்போது, அதன் பலன் ஆனது அவனது ஆளுகைக்கு கீழ் வரும். அனைவருக்கும் சென்று சேரும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள்.

?கைகளில் செம்பு மற்றும் வெள்ளியினாலான காப்புகளை அணிகிறார்களே, இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

நம்மைக் காக்கின்ற கவசம் என்பதால்தானே அதனைக் காப்பு என்று அழைக்கிறார்கள். பொதுவாக, செம்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களுக்கு ஈர்ப்புத்திறன் என்பது அதிகம். எளிதாக கடத்தும் உலோகங்கள் என்று அறிவியலில் படித்திருப்போம். அதுபோல, தெய்வீக சக்திகளை ஈர்த்து அதனை அணிந்திருப்பவரின் உடலிலும் உள்ளத்திலும் தன்னம்பிக்கையைத் தருவதோடு, அந்த மனிதரை எதிர்மறை சக்திகளிடம் இருந்து காக்கிறது என்பதால்தான் இதுபோன்ற காப்புகளை அணிந்து கொள்கிறார்கள்.

?பூஜை அறையை மாதத்திற்கு எத்தனை முறை சுத்தம் செய்தால் நல்லது?
– கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.

பூஜை அறையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். நாம் தினந்தோறும் குளிக்கிறோம் தானே, மாதத்திற்கு இத்தனை முறைதான் குளிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையா வைத்திருக்கிறோம். குடியிருக்கும் வீட்டை தினந்தோறும் பெருக்கி சுத்தம் செய்கிறோம் தானே, அதுபோலத்தான் தெய்வம் குடியிருக்கும் பூஜை அறையையும் தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையில் மட்டும் சுத்தம் செய்தால் போதுமானது என்று சொல்வதெல்லாம் நமது சோம்பல்தன்மையின் வெளிப்பாடுதான். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?மூதாதையருக்கான விசேஷங்களை இல்லத்தில் நடத்தும்போது, ஒற்றுமை குறைந்தால் ஏற்றுக் கொள்வார்களா?
– என்.ஜே.ராமன், திருநெல்வேலி.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த காலத்தில், எல்லோரும் ஒன்றாக இணைந்து மூதாதையருக்கான விசேஷங்களை நடத்தினார்கள். தற்போது கூட்டுக்கூடும்ப கலாச்சாரம் என்பதே அரிதாகிவிட்ட நிலையில், அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றார்போல், அந்த விசேஷங்களை செய்து கொள்வதே நல்லது. சமையல் என்பது பிரிந்துவிட்டாலே, சிராத்தம் என்கிற முன்னோர் வழிபாட்டையும் தனித் தனியேதான் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஒரே வீட்டிலேயே அண்ணன் தம்பி இருவரின் குடும்பங்களும் தனித் தனியே சமைத்து சாப்பிடுகிறார்கள் என்றால், சிராத்தமும் தனித் தனியேதான் செய்யப்பட வேண்டும்.

?பரம்பரை நோய் இருக்கிறது என்று கூறுகிறார்களே, உண்மையா?
– கணேசன், சென்னை.

உண்மைதானே. சர்க்கரை நோய் போன்றவை பரம்பரையாக வருவதை மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்களே. ஜோதிடவியல் ரீதியாக, மரபணுக்களை கடத்தும் கிரஹங்களாக ராகு – கேதுக்களைச் சொல்வார்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலையே, பரம்பரை நோய்களைத் தருகிறது என்பதை ஜோதிடமும் வலியுறுத்துகிறது. ஆக, பரம்பரை நோய் என்பது, உண்மையே. அதே நேரத்தில், எல்லா நோய்களும் பரம்பரை நோய்கள் அல்ல என்பதையும், புரிந்துகொள்ள வேண்டும்.

?பூஜை அறை இல்லாத வீடு என்றால், தியானத்தை எந்த இடத்தில் செய்யலாம்?
– ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

“பிரம்மஸ்தானம்’’ என்று அழைக்கப்படும் வீட்டின் மையப்பகுதியில் அமர்ந்து தியானம் செய்யலாம். பூஜை அறை என்பது தனியாக இல்லாவிட்டாலும், பூஜைக்குரிய அலமாரியை வாங்கி, அதில் ஸ்வாமி படங்களை வைத்து வழிபட்டு வரலாமே. குறைந்தபட்சமாக, ஒரு விளக்கையாவது ஏற்றி வழிபட்டு வர வேண்டும் அல்லவா. பூஜை அறை இல்லாத வீடு என்பது, பூரணத்துவம் பெறாது.

Tags : T. Satyanarayana ,Ayanpuram ,
× RELATED பத்ம புராணம் காட்டும் தத்துவம்