×

இந்த வார விசேஷங்கள்

7.3.2026 – சனி கோவை கோனியம்மன் தீர்த்தம் யாளி வாகனத்தில் பவனி

கோனியம்மன் கோயில் கோவை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை மையமாகக் கொண்டே கோவை நகரம் அமைக்கப்பட்டது. இன்றைய கோவை மாநகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் காடுகளாகவும், முட்புதர்களாகவும் இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் என்பவர் அதனைச் சீர்படுத்தி ஒரு புதிய ஊரை உருவாக்கினார். கோவன் அமைத்த புத்தூர் என்பதால், கோவன் புத்தூர் என அந்த ஊர் அழைக்கப்பட்டது. அந்த ஊரே இன்று கோயம்புத்தூர் என அழைக்கப் படுகிறது. கோவன் ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அப்போது, சேர மன்னன் படையெடுத்து வர, தன் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பொருட்டு, கோவன்புத்தூரின் மையத்தில் ஓரு கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, காப்புத் தெய்வமான அம்மனை “கோயம்மா” என்று பெயரிட்டு வைத்து வழிபட்டார்.

இளங்கோசர் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. கோவை மாநகரில் கோட்டை ஈஸ்வரன் கோயில், பேட்டை ஈஸ்வரன் கோயில் என்ற இரண்டு சிவன் கோயில்களுக்கு இடையில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில். மாசி மாதத்தில், திருக்கோயில் முன் அக்னிக் குண்டம் அமைக்கப்பட்டு, அதில் ஒளிரும் அக்னியையே சிவபெருமானாகப் பாவித்து, அருகில் வைக்கப்படும் தீர்த்த கலசத்தின் மேல் திருமாங்கல்யம் அணிவித்து பூஜை செய்யப்பட்டு பின்னர் அது அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்கு, அக்னி திருமணம் என்று பெயர். அக்னி திருமணத்திற்கு மறுநாள் தேரோட்டம் நடைபெறும். இன்று தீர்த்தவாரி, அம்மன் யாளிவாகனத்தில் பவனி வருகிறார்.

8.3.2026 – ஞாயிறு மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்

2026 – ஆம் ஆண்டிற்கான மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் வருடாந்திர உற்சவம் (பங்குனி திருவிழா) மார்ச் 8,2026 அன்று தொடங்குகிறது. இந்த பிரமாண்டமான திருவிழா, காவிரி டெல்டா பகுதியில் மிகவும் பிரபலமானது, முக்கிய நிகழ்வுகள்
* 8.3.2026 – ஞாயிறு – நாள்: 1 காலை: த்வஜாரோஹணம், இரவு: 8 மணிக்கு – கல்யாண சேவை திருக்கோலம், இரவு: 9 மணிக்கு – கோடி சப்பரம்.
* 17.3.2026 – செவ்வாய் – நாள்: 10 இரவு: 9 மணிக்கு – தங்க சூர்ய பிரபை (வேணுகோபாலன் அலங்காரம்).
* 19.3.2026 – வியாழன் – நாள்: 12 இரவு: 9 மணிக்கு – தங்க கருடவாஹனம்.
* 21.3.2026 – சனி – நாள்: 14 இரவு: கல்யாண உற்சவம்.
* 23.3.2026 – திங்கள் – நாள்: 16 வெணெய்த்தாழி உற்சவம்.
* 24.3.2026 – செவ்வாய் – நாள்: 17 – தேரோட்டம், இரவு: 7.30 மணிக்கு தீர்த்தவாரி.
* 25.3.2026 – புதன் – நாள்: 18 புஷ்ப யாகம் – சப்தாவர்ணம்.
* 6.4.2026 – திங்கள் – தெப்போற்சவம்.

9.3.2026 – திங்கள் சஷ்டி

திதியின் அடிப்படையில் முருகப் பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் சஷ்டி நாள். இந்த நாளில், காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப் பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல்களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப் பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூபதீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம்.

10.3.2026 – செவ்வாய் குரங்கணி முத்துமாரியம்மன் புறப்பாடு

தூத்துக்குடி மாவட்டம், தென் திருப்பேரை அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில், ராமாயண காலத்துடன் தொடர்புடையது. இங்கு அம்மன் நான்கு திருக்கரங்களுடன், கிளி ஏந்தி அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்துமாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார்.

பின்பு ஊர் மக்கள்கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்து மாலை கிடந்த இடமானதால் அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர்.

பழங்காலத்தில் இத்திருக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நிவேதங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் விதமாக, இவ்வாறு தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

1957-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த போது, அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோயில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் நிவேதனங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அனுமனுடன் வானரப்படைகள் சீதாதேவியை தேடிச் சென்ற போது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமன் அதன் அருகே சென்று பார்த்தபோது ‘அது சீதையின் முத்து மாலை’ என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார்.

அதற்கு கோயிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோயில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர். ‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என மூன்று முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்று கோயில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோயிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, 2 மண் குதிரைகள் செய்து கோயிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோயிலில் பெரிய சுவாமி சந்நதியில் காணலாம். இன்று அம்மன் புறப்பாடு நடைபெறும்.

11.3.2026 – புதன் திரியம்பகாஷ்டமி

பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி திரியம்பகாஷ்டமி என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இந்த நாள் பைரவர் வழிபாட்டிற்கு உகந்தது, குறிப்பாக, குழந்தை பாக்கியம் மற்றும் செல்வம் பெருக, இந்த நாளில் சொர்ண ஆகர்ஷ பைரவரை வணங்கி அன்னதானம் செய்வது மிகச் சிறப்பான பலன்களைத் தரும்.

13.3.2026 – வெள்ளி காரி நாயனார் குரு பூஜை

இன்று மாசி மாதம் பூராடம். காரி நாயனார் குருபூஜை தினம். காலனை கடிந்து, தன்னை சரணடைந்த மார்க்கண்டேய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர். அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரிநாயனார். செந்தமிழ் கற்றவர். நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர். நான்கு வகை கவி பாடுவதில் வல்லவர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி, பெரும் பரிசில்களைப் பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவனடியார்களுக்கும் சிவனுடைய திருத்தல தொண்டுக்கும் முழுமையாக பயன்படுத்துவார். கயிலை நாதனை கன நேரமும் மறவாதவர். அதனால் சிவபெருமான் இவரை நேரடியாக கயிலை பதியை அளித்தார்.

13.3.2026 – வெள்ளி சீதா தேவி விரதம்

பங்குனி தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. (சில இடங்களில் வைகாசி மாதம் சுக்லபட்ச நவமி அன்று, சீதா பிராட்டியின் அவதார தினமாகக் கொண்டாடப் படுகிறது) முக்கியமாகத் திருமணமான பெண்களால் கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவும், நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. காலையிலேயே எழுந்து குளித்து முடித்து சுத்தபத்தமாக பூஜை அறையை தயார் செய்ய வேண்டும். சீதா ராமனுடன் அனுமாரும், லட்சுமணனும் இருக்கும் படத்தை மஞ்சள் தடவிய மனையில் வைக்க வேண்டும். படத்திற்கு துளசி மாலை தயார் செய்து அணிவிக்க வேண்டும். சந்தனத்துடன் பன்னீர் கலந்து பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும்.

சீதா தேவிக்கு நிவேதனம் படைக்க இனிக்க இனிக்க சர்க்கரைப்பொங்கல் தயார் செய்து வாழை இலையில் படையுங்கள். பின் சுண்டல், பானகம், நீர்மோர், இளநீர், பாயாசம், தயிர் சாதம், பால், பழங்கள் போன்றவற்றை வைக்கலாம். நம்மால் என்ன முடியுமோ அதை தயார் செய்து வைத்தால் போதும். பின்னர் பூஜையில் இரண்டு குத்துவிளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். சீதாதேவியின் சகஸ்ரநாமம் சொல்லி மணம் மிகுந்த புஷ்பங்களால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் சீதாராமன் கதையை வாசிக்க வேண்டும். “ஸ்ரீ ராம ஜெயம்” என்னும் மந்திரத்தை 108 முறை எழுதலாம்.

Tags : Bhavani ,Goniamman Temple ,Gowai Koniamman Temple ,Yali ,Gowai ,Ikoil ,Koi ,
× RELATED காஞ்சி – திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்