×

குடும்பத்தை காக்கும் கரைப்பூண்டி மகான்…

23 மகான்

மலையின் நிழல், தங்கமான மணி, எங்கும் நாகர்கள், சோளிங்கரை நோக்கி அனுமன், பிருந்தாவனம் மேலே சிற்பம், இளமை காலம், சந்நியாசம் பெறுவது என சென்ற இதழில் மகான் சங்கர்ஷண ஒடையரை பற்றி பல தகவல்களை பார்த்தோம். இந்த இதழில் மேலும் சில தகவல்களை பார்ப்போமா!

நெல் பொரி மட்டும் போதும்

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கர்ஷண ஒடையருக்கு ஏற்படுகிறது. ஆகவே, ஹொளே நரசிம்மபுரம் வழியாக திருமலைக்கு செல்ல ஆயத்தமானார். போகும் வழியில், சூர் என்னும் நதிக்கரையில், ஸ்ரீசங்கர்ஷண ஒடையர் தவம் செய்து கொண்டிருக்க, அப்போது திடீர் என்று“தனக்கு இனி லௌகிகமாக இருக்கக்கூடிய எந்த பொருளும் வேண்டாம் என முடிவு செய்து, தன்னிடம் பூஜைக்காக மிச்சமிருந்த தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான புலித்தோல், பூஜைக்கு தேவையான சில பாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு,திருமலைக்கு சென்றார்.

அங்கு ஸ்ரீவராகமூர்த்தி சந்நதியில், இரண்டு மாதகாலம் கடும் தவம் மேற்கொண்டார். அங்கும் ஒரு முடிவெடுக்கிறார். இனி, சதாசர்வ காலமும் நெல் பொரியினை மட்டுமே உண்டு, பகவானை தியானிப்பது என்கின்ற சங்கல்பத்தையும் எடுத்துக்கொண்டார். அன்று முதல் நெல் பொரி மட்டுமே ஒடையரின் ஆகாரம். (இன்றும்கூட சங்கர்ஷண ஒடையருக்கு தினமும் நெல் பொரிதான் நிவேதனமாக செய்யப்படுகிறது) அதன் பலனாக ஒரு நாள், ஸ்ரீநிவாசப் பெருமாள், சங்கர்ஷண ஒடையாரின் கனவில் தோன்றி;“கடிகாசலம் (சோளிங்கபுரம்) என்ற ஷேத்திரத்திற்கு சென்று, அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும், ஸ்ரீயோகாஞ்சநேயரையும் தரிசிக்குமாறு’’ கூறினார். பெருமாள் கூறியதை போல், தரிசித்தார். அன்று இரவு, மீண்டும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கனவில் தோன்றினார்.

“வேலூரில், ஸ்ரீசத்யாஜிராயர் என்னும் மஹானின் மூலபிருந்தாவனம் உள்ளது. பல காரணங்களால் அவருக்கு பூஜை தடைப்பட்டுள்ளது. ஆகையால், நீ அங்கு சென்று இதனை சரி செய்ய வேண்டும்’’ என்று ஸ்ரீனிவாசப் பெருமாள் கூறினார். பெருமாளின் கட்டளைப்படி, வேலூருக்கு சென்று சுமார் 9 ஆண்டுகள் வரை ஸ்ரீசத்யாஜிராயருக்கு சேவைகளை செய்துவந்தார். அங்கு, ஆரணி ஹனுமந்தராவ், சாமாராவ், மாதவராவ், சஞ்சீவிராவ், ஆத்ய ஸ்ரீனிவாசாச்சார் ஆகியோர் சித்தூர் அருகே உள்ள கிரீம்ஸ் பேட்டைக்கு, ஸ்ரீசங்கர்ஷண ஒடையரை அழைத்து சென்று வேத, புராண, கிரந்தங்களையும், ஹரிகதாமிருதசாரத்தையும் அவரிடத்தில் கற்று வந்தார்கள்.

பிருந்தாவன பிரவேஷம்

ஒரு முறை, சங்கர்ஷண ஒடையரின் பரம குருவான ஸ்ரீசத்யபராயண தீர்த்தர் வேலூருக்கு விஜயம் செய்தார். அந்த சமயத்தில், ஸ்ரீசத்யாதிராயருக்கு பூஜைகள் நடப்பதையும், தன் சீடன், சங்கர்ஷண ஒடையரின் தவம் வலிமையையும் கண்ட சத்யபராயண தீர்த்தர்,“உனக்கு காசி, ராமேஸ்வரம், பத்ரி போன்ற தீர்த்த யாத்திரைக்கு சென்று வந்த பலன் கிடைத்துவிட்டது.

உனது தவம் வலிமையால், நீ ஞானம் பெறப்போகிறாய்’’ என்று வாழ்த்தியிருக்கிறார். (பாருங்கள்… குருவிற்கு சேவைகள் புரிந்தால், பல ஷேத்திரங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பலன் கிடைக்கிறது!)ஒடையர், தன் சீடர்களை அழைத்துக்கொண்டு, பல ஷேத்திரங்களுக்கு பாதயாத்திரையாகவே பயணித்தார். அப்படி சஞ்சரித்து வரும் வழியில், ஓகூர் கிராமத்தில், எச்.ஸ்ரீனிவாசராவ் வீட்டில் சுமார் மூன்று ஆண்டு காலம் வரை தங்கியிருந்து, உபதேசங்களை செய்துவந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின், பல தேச சஞ்சாரங்களை மேற்கொண்ட சங்கர்ஷண ஒடையர், கடைசியாக கரைப்பூண்டியின் மகிமைகளை உணர்ந்து, இங்கேயே தங்க முடிவு செய்தார். தினமும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனுக்கு பூஜை செய்வது, விசேஷ நாட்கள் வந்தால், அதனை ஏற்று கரைப்பூண்டி மக்களை வழிநடத்துவது, தனது உபன்யாசத்தினால் மக்களை நல்வழிபடுத்துவது போன்ற சிறப்பான செயல்களை செய்துவந்தார்.

ஒரு நாள், தன் சீடரான சஞ்சீவிராவை அழைத்து, தான் பிருந்தாவனமாகும் காலம் நெருங்கிவிட்டது. ஆகையால், யதிகளுக்கென்று (சந்நியாசிகளுக்கு) செய்யப்படும் சிறப்பு பூஜைகளை செய்து, மூலபிருந்தாவனம் அமைய ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். இதைக்கேட்ட சஞ்சீவிராவ் வேதனையடைந்தார். “ஸ்வாமி… நீங்கள் இல்லாத நாட்களை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது காலம் கரைப்பூண்டி மக்களோடு இருக்கக்கூடாதா’’ என்று கண்ணீர் மல்க சஞ்சீவிராவ் கூறினார்.

“நான் எங்கேயும் செல்லப் போவதில்லை. கரைப்பூண்டியில், கரைபூண்டு ஓடும் செய்யாற்றின் அருகில், கரைப்பூண்டி மக்களுக்காக இங்கேயேதான் இருக்கப்போகிறேன். பிருந்தாவனம் பிரவேசம் ஆன பிறகும்கூட, பிருந்தாவனத்திற்குள்ளே பரமாத்மாவை நினைத்து தியானத்திலேயே இருப்பேன். பல ஆண்டுகள் கடந்தும், வேண்டுவோருக்கு வேண்டியதை தந்தருள்வேன்’’ (சங்கர்ஷண ஒடையர் பிருந்தாவனம் பிரவேசித்து சுமார் 163 – ஆண்டுகள் கடந்துவிட்டன) என்று சஞ்சீவிராவிடம் தெரிவிக்க, பூஸ்தாபனம் அதாவது ஒடையர் பிருந்தாவனம் ஆவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.

ஜடாமுடியுடன் ஒடையர்

1862-ஆம் ஆண்டு, துந்துபி வருடம், மார்கழி சுத்த பஞ்சமி அன்று பிருந்தாவனமானார், ஸ்ரீசங்கர்ஷண ஒடையர். சில மாதம் கழித்து, சஞ்சீவிராவின் கனவில் தோன்றிய ஒடையர், தான் சொன்னபடி கிரமமாக (முறைப்படி) செய்யவில்லை என்று சொல்லி, அதனை சரிசெய்ய கட்டளையிட்டிருக்கிறார். மத்வ சம்ரதாயத்தில், பிருந்தாவனத்திற்கு இடம் தேர்வானப்பிறகு, மிகப்பெரிய குழியை வெட்டி, அதனுள் உப்பு போன்ற சிலவற்றை இறைத்து,சந்நியாசியை அதில் அமர வைத்து, நன்கு பலகையை கொண்டு மூடிவிடுவர். அதன் மேலே பல எண்ணிக்கை அடங்கிய சாளக்கிராமங்கள் மற்றும் விக்ரகங்களை வைத்து மூடிவிடுவார்கள்.

அதன் பின், ஒரு குறிப்பிட்ட மாதம் கடந்த பின்னர், மூடிய பலகையை மீண்டும் எடுத்து, சில சம்ரதாயங்களைச் செய்து, அதன் பின்னரே பிருந்தாவனம் எழுப்புவார்கள். ஆகையால், சங்கர்ஷண ஒடையரை வைத்து மூடிய பலகையை சஞ்சீவிராவ் திறந்து பார்த்திருக்கிறார். தலையில் ஜடாமுடி வளர்ந்திருப்பதையும், உடலில் புதியதாக கோபிசந்தனம் மற்றும் சங்கு, சக்கரம் போன்ற முத்திரைகள் இருந்ததையும் கண்டு, பரவசம் அடைந்தார். சஞ்சீவிராவ் மட்டும் இல்லாது, அக்காலத்தில் கூடியிருந்த கரைப்பூண்டி மக்களே பரவசமடைந்தார்கள். சங்கர்ஷண ஒடையர் கூறியதை போல், அனைத்தையும் சரி செய்துவிட்டு, எட்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரீசங்கர்ஷண ஒடையரின் மேலே பிருந்தாவனம் எழுப்பப்பட்டது. அன்று முதல் இன்று வரை இடைவிடாது பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வருடாவருடம் வருகின்ற இவரது ஆராதனையில், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாகாம்சம் கொண்ட ஒடையர்

சங்கர்ஷண ஒடையரை தரிசித்துவிட்டு, அவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றோம். சுமார் 165 ஆண்டுகளை கடந்தேறிய இடம். வீட்டின் நுழைவுப் பகுதி இரு புறத்திலும், சுமார் பத்து நபர்கள் உறங்கும் அளவிற்கு திண்ணைகள். அதனை கடந்து உள்ளே சென்றதும், இரண்டு அறைகள் இருக்கின்றன. அதன் பின்இடதுபுறத்தில் ஸ்ரீசங்கர்ஷண ஒடையர், தினமும் தவம் மேற்கொள்ளும் அறை இருக்கிறது. முன்னொரு காலத்தில், இந்த அறையில், சங்கர்ஷண ஒடையர் தவம் செய்து கொண்டிருக்கும் போது, ஒருவர் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்துவிடுகிறார். பார்த்தவர், அதிர்ந்தும் போனார். காரணம், சங்கர்ஷண ஒடையர், ஐந்து தலை நாகம் வடிவமாக காட்சியளித்திருக்கிறார். அன்றிலிருந்து, சங்கர்ஷண ஒடையரை ருத்ராம்சம் (சிவனின் அம்சம்), மற்றும் சேஷாம்சமாக (நாகர் அம்சம்) பார்க்கப் படுகிறார்.இப்போது தெரிகிறதா… கோயில் முழுவதிலும் ஏன் நாகர்கள் பிரதிஷ்டை யாகியிருக்கிறார்கள் என்று!

பூஜித்த மூன்று தெய்வ சிலைகள்

அதுமட்டுமா.. ஸ்ரீசங்கர்ஷண ஒடையரின் பூர்வாஸ்ரமத்தில், கர்நாடக மாநிலம் தார்வாட் என்னும் இடத்தில் வாழ்ந்த போது, மகாவிஷ்ணு, அனுமன், நாகர் ஆகிய மூன்று சிலா விக்ரகத்திற்கும், தினமும் பூஜை செய்து வந்திருக்கிறார். நாளடைவில், இந்த சிலா விக்ரகங்களை பூஜிக்க ஆட்கள் யாரும் இல்லாததால், சங்கர்ஷண ஒடையரின் வாரிசுகள், தார்வாடில் இருந்து அந்த மூன்று சிலைகளையும் கொண்டு வந்து, இக்கோயிலின் நிர்வாகிகளிடத்தில் ஒப்படைக்க, கோயில் நிர்வாகிகள், சங்கர்ஷண ஒடையர் தவம் செய்த இடத்தில், அவரின் நினைவாக மூன்று தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்தார்கள்.

இன்றும் அவைகள் அப்படியே காணப்படுகின்றன. அங்கு சென்றால், மூன்று தெய்வ சிலைகளை தரிசிக்க முடியும்.தற்போது, சங்கர்ஷண ஒடையர் வாழ்ந்த இடத்தை அங்குள்ள பக்தர்கள் “ஒடையர் மடம்’’ என்றே அழைக்கிறார்கள். ஆக, மகான் ஸ்ரீவியாசராஜர் பிரதிஷ்டை செய்த “முக்ய பிராணன்’’ என்னும் பெயரில் அனுமன், நாகாம்சம் கொண்ட மகான் ஸ்ரீசங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம், அவர் வாழ்ந்த வீடும், தவம் செய்த அறையும், அந்த இடத்தில் சங்கர்ஷண ஒடையர் பூஜைகள் செய்த மகாவிஷ்ணு, அனுமன், நாகர் ஆகிய மூன்று சிலா விக்ரகம் பிரதிஷ்டை ஆகியிருப்பதை கரைப்பூண்டி மக்கள், பெருமையாக கருதுகிறார்கள்!

ரா.ரெங்கராஜன்

Tags : Sankarshana Odyar ,Makan hill ,Anuman ,Solingara ,Brindavana ,
× RELATED பத்ம புராணம் காட்டும் தத்துவம்