சென்னை: சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் கேப்டன் ஆன்மாவை பற்றி பேசுகிறார்கள். திமுகவோடு விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பிரேமலதா கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேலமதா நேற்று அளித்த பேட்டி: தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்க்கு, கேப்டனின் ஆசீர்வாதத்தாலும், மக்களின் ஆதரவோடும், தேமுதிகவின் அனைவரின் ஆதரவோடும் ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளது. எவ்வவோ ஆண்டுகளுக்கு முன்னாடி கிடைத்திருக்க வேண்டியது.
2026ல் அது சாத்தியமாகி இருக்கிறது. நீண்ட நாள் கனவு நடக்கும் போது என்ன சந்தோஷம் இருக்குமோ? அந்த சந்தோஷம் தான் இப்போது இருக்கிறது. ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லி கொள்கிறேன். இந்த எல்லா புகழும் கேப்டனையை சாரும். அத்தனை புகழும் அவருக்கு தான். அவர் தெய்வமாக இன்று எங்களை வழிநடத்தி கொண்டிருக்கிறார். 2009ல் இருந்து இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க வேண்டியது.
ஒவ்வொரு எம்பி தேர்தலின் போதும் தவறிக்கொண்டே இருந்தது. அது வந்து 2026ம் ஆண்டில் தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கா? என்று எங்களுக்கு தெரியவில்லை. தேசியமும், திராவிடமும் இணைந்தது தான் தேமுதிக. அந்த வகையில் இந்திய அளவில் ஜனநாய கடமையாற்ற இருக்கும் சுதீஷ்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் விரைவில் குழு அமைத்து திமுக குழுவோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். ராஜ்ய சபா சீட்டை 2024ல் எடப்பாடி கொடுத்து இருக்க வேண்டியது.
அது நடக்கவில்லை. நாங்க இது வேணும், அது வேண்டும் என்று கேட்கவில்லை. நான் ஏதோ துணை முதல்வர் கேட்ட மாதிரியும் நீங்கள் தான் எழுதி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எதுவும் பேசியதும் இல்லை, கேட்கவும் இல்லை. தேமுதிகவுக்கு எவ்வளவு சீட் கிடைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். நிச்சயமாக அது அமையும். கடந்த மக்களவை தேர்தலில் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த சட்டசபை தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள், எந்த தொகுதி என்பதை உரிய நேரத்தில் தலைமை அறிவிக்கும். திமுகவுடனாக பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் கிடையாது. கேப்டன் ஆன்மா எது தெரியுமா?. கடைகோடியில் இருக்கும் தொண்டன் தான் கேப்டன் ஆன்மா. கேப்டனுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மாவை பற்றி பேசிக் ெகாண்டிருக்கிறார்கள். அதை நகைப்புக்குரியதாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
