சென்னை: தங்களால் தான் மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதாக தவெக கற்பனை செய்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தூத்துக்குடியில் இருந்து, விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரியில் நடந்த இரட்டை படுகொலை சம்பந்தமாக, நேரில் சென்று ஆறுதல் கூறி, நிதி உதவியை அளித்துவிட்டு வந்தேன்.
சம்பவம் நடந்த பகுதியில், 1 ஒரு கிலோ மீட்டருக்குள், 3 மதுக்கடைகள் உள்ளன. அவைகளை அகற்ற வேண்டும், அந்த பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நான் முதலமைச்சருக்கு தெரியப்படுத்த இருக்கிறேன். இந்த பிரச்னைகளில், முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நான் ஏற்கனவே கூறியபடி, காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடர்வது மகிழ்ச்சி.
அவரவர் வலிமைக்கு தகுந்தாற்போல், கூட்டணியில் இடங்கள் கேட்டு பெறுவது வழக்கம். எங்களால், எங்கள் வலிமைக்கு ஏற்ப, கேட்டு பெறுவோம். எத்தனை இடங்கள் என்பது, பேச்சுவார்த்தைக்கு பின்பு தெரியும். தவெக கட்சி தொடங்குவதற்கு முன்பே, நாங்கள், எங்கள் கோரிக்கைகளை எழுப்பி இருக்கிறோம். அதிமுக, திமுக கட்சிகளிடம் பேசி இருக்கிறோம்.
2011ம் ஆண்டு தேர்தலில், எங்களுக்கு இரட்டை இலக்கமான, 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்பு கூட்டணியில் பல கட்சிகள் இருந்ததால், 10 இடங்களாக குறைக்கப்பட்டன. அதேபோல், 2006ம் ஆண்டு, அதிமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் 9 இடங்கள், பாண்டிச்சேரியில் 1 இடம் என்று 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது எல்லாம், தவெக என்ற கட்சியே கிடையாது. எனவே அவர்களாகவே அவ்வாறு கற்பனை செய்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
