×

தனியார் விற்பனை நிலையங்களில் விதை விற்பனை ரசீது வழங்குவது கட்டாயம் துணை இயக்குநர் தகவல்

ஓமலூர், பிப்.10:விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம்,  நாமக்கல் மாவட்டத்தில் 1060 தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும்  நர்சரிகள் செயல்படுகிறது. விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை  ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வின்போது இருப்பு பதிவேடு,  கொள்முதல் மற்றும் விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதைப்பகுப்பாய்வு  முடிவு பதிவேடு, பதிவுச்சான்று, முளைப்புத்திறன் அறிக்கை முதலியவை சரிவர  பராமரிக்கப்படுவதை விதை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். விதை  விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்யும்போது விதையின்  பெயர், ரகம், காலாவதி தேதி, குவியல் எண், விதையின் அளவு ஆகியன அடங்கிய  ரசீது வழங்கவேண்டும். விலைப்பட்டியலில் மேற்கூறிய விவரங்களுடன் விதை  விற்பனையாளர் கையொப்பம், விவசாயிகள் கையொப்பம் பெற்றிருக்கவேண்டும்.  

அவ்வாறு வழங்காத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை  விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். விதை விற்பனை நிலையங்களில் உள்ள விதை  குவியல்களிலிருந்து விதைமாதிரிகள் ஆய்வாளர்களால் எடுக்கப்பட்டு  முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு  அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவில் விதைகள் தரம் குறைவாக உள்ளது  தெரியவந்தால், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும். விதை  விற்பனையாளர்கள், விவசாயிகளின் கண்களில் படும்படி தகவல் பலகை மற்றும் விதை  விற்பனை உரிமம் வைக்கவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : outlets ,
× RELATED தேர்தலுக்காக குவியும் பாண்டிச்சேரி...