×

தேர்தலுக்காக குவியும் பாண்டிச்சேரி சரக்கு கண்டறிந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை, மார்ச் 27: கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் 200க்கும் மேற்பட்ட பிராண்ட் இருந்தபோதிலும் குறிப்பிட்ட 30 வகையான பிராண்ட் மதுபானங்கள் மட்டுமே சப்ளையாகி வருவதாக தெரிகிறது. அதிலும் குறைந்த விலை மதுபாட்டில்கள் கடை விற்பனையாளர்களின் விருப்பத்தின் படியே விற்பனையாகிறது. குறைந்த விலை மதுபாட்டில்களின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவனிக்கும் வகையில் பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கோவைக்கு கடத்தி வந்து பதுக்கி விற்பதாக புகார் எழுந்துள்ளது. கலால் வரி மிகவும் குறைவாக இருப்பதால் மதுபாட்டில்களை வாங்கி அதை கோவைக்கு பல்வேறு சரக்கு வாகனங்களில் ஏற்றி கடத்தி வந்து தேர்தல் பணியில் உள்ள ஓட்டு சேகரிப்பாளர்களுக்கு வழங்க சிலர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. கேரளாவில் இருந்து குறைந்த விலை மதுபானங்கள் கோவை மாவட்டத்தில் பரவலாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

குறிப்பாக பாலக்காடு மாவட்டம் சந்திராபுரம், வட்டப்பாறை, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதியில் இருந்து குறைந்த விலை மதுபாட்டில்கள் கோவைக்கு வருகிறது. இவற்றை கேரள கலால் துறையினர் கண்டுகொள்வதில்லை. கேரளாவில் பெரும்பாலான பிராண்ட் மதுபானங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படுகிறது. கால் லிட்டர், அரை லிட்டர் என கேரள மதுபாட்டில்கள் கோவை மாவட்டத்தில் பரவலாகி வருகிறது. திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலத்தின் பாக்கெட் பாட்டில் மதுபாட்டில்களும் கோவை மாவட்டத்திற்கு சப்ளையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரிரு இடங்களில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினாலும் மதுபானம் கடத்தி வரும் வாகனங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் குறிப்பாக பஸ்களில் மட்டும் கடும் சோதனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மதுபானங்கள் மூலமாக கடத்தல் கும்பலுக்கு 30 சதவீதம் வரை லாபம் கிடைப்பதாக தெரிகிறது. இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மதுபானம் பதுக்கி வைத்து சப்ளை செய்தால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post தேர்தலுக்காக குவியும் பாண்டிச்சேரி சரக்கு கண்டறிந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pondicherry ,Coimbatore ,Coimbatore district ,Tasmac ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்