×

ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேட்டூர், பிப்.10: மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் ₹565 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நங்கவள்ளியில் உள்ள பில்லுகுட்டை ஏரி, வனவாசிஏரி மற்றும் கணக்கன் ஏரி ஆகியவை ₹6.65 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நங்கவள்ளி ஏரி 16 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் புதர்மண்டி காணப்படுகிறது. நங்கவள்ளி பேரூராட்சியின் மொத்த சாக்கடை கழிவுகளும் அப்பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவுகளும் இந்த ஏரியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், ஏரி கொடிய நோய் பரப்பும் ஏரியாக மாறிவிட்டது. மாசடைந்த ஏரியை தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நங்கவள்ளி ஏரி புனரமைக்கப்படுவதற்காக இதில் உள்ள தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள கோவில் தெப்பக்குளத்திற்கு பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டது. ஏரியை புனரமைத்தாலும் பேரூராட்சியின் சாக்கடை கழிவுகளும், சாயக்கழிவுகளும் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியை சுத்தப்படுத்தி காவிரி நீரை நிரப்பினாலும் மீண்டும் ஏரியில் சாயக்கழிவுகளும், பேரூராட்சியின் சாக்கடை கழிவுகளும் ஏரியில் கலந்து நீரை மாசடையச்செய்யும். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள 10 ஏக்கர் ஏரியை மீட்கவேண்டும் என்றனர்.

Tags : lake ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!