×

நேபாளத்தில் இன்று பொது தேர்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு

காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழலை கண்டித்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்ளாள் நீதிபதி சுசீலா கார்க்கி நேபாள இடைக்கால பிரதமராக கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பதவி ஏற்றார். அவரது பரிந்துரைப்படி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் மார்ச் 5ம் பொதுதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேபாள நாடாளுமன்றத்துக்கு இன்று பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 1,89,03,689 பேர் வாக்களிக்க உள்ளனர்.

275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த சபையான கீழ் சபைக்கு 3,406 வேட்பாளர்களில் 165 உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க உள்ளனர். மீதமுள்ள 110 இடங்களுக்கு 3,135 வேட்பாளர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெறும் வாக்குகளின் பங்கின் அடிப்படையில் உறுப்பினர்களை பரிந்துரைக்கின்றன. பொது தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 2ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் நேபாள எல்லையோர மாவட்டங்கள் கடந்த 2ம் தேதி முதல் மூடப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : General Election ,Nepal ,Kathmandu ,India ,K. B. Sharma Oli ,
× RELATED இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது...