×

இந்தியாவில் நடந்த சர்வதேச பயிற்சியில் பங்கேற்று நாடு திரும்பிய ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்க நீர்மூழ்கி: இலங்கை அருகே அதிரடி தாக்குதல் 87 வீரர்கள் பலி, 61 பேர் மாயம்; 32 பேர் உயிருடன் மீட்பு

கொழும்பு: இந்தியாவில் நடந்த சர்வதேச பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய ஈரான் போர் கப்பலை தெற்கு இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது. இதில், 87 வீரர்கள் பலியானார்கள். 32 பேர் உயிருடன் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர். இந்த கப்பலில் பயணம் செய்த ஈரான் கடற்படையினர் 61 பேர் மாயமாகி உள்ளனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சிகள் நடந்தன.இதில் 74 நாடுகளின் கடற்படைகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன.

இவற்றில் ஈரான் கடற்படையைச் சேர்ந்த ஐ.ஆர்.ஐஎஸ் டேனா போர் கப்பலும் ஒன்று. பயிற்சியில் பங்கேற்றபின் ஈரான் போர் கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து 180 பேருடன் புறப்பட்டது. இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதால், அந்த கப்பல் விரைவாக நாடு திரும்பிக்கொண்டிருந்தது. ஐ.ஆர்.ஐஎஸ் டேனா போர் கப்பல,் தெற்கு இலங்கையில் காலி துறைமுகத்தில் இருந்து 40 கடல்மைல் தூரத்தில் இந்திய பெருங்கடலின் சர்வதேச கடல்பகுதியில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஈரானிய போர் கப்பலை நோக்கி அமெரிக்க கடற்படையின் நீழ்மூழ்கி கப்பலில் இருந்து திடீரென ஏவுகணை வீசப்பட்டது. இந்த ஏவுகணை மோதி வெடித்து சிதறியதில், ஈரானிய போர் கப்பல் டேனா தீப்பிடித்து எரியத் துவங்கியது. பலத்த சேதமடைந்த கப்பல் மூழ்க துவங்கியது. இதையடுத்து, ஈரானின் போர்கப்பலில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று அவசர அழைப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்றனர். அப்போது, மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பல் அருகே ஏராளமான சடலங்கள் மிதந்தன. கப்பலில் இருந்த 32 ஈரான் கடற்படை வீரர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தெரிவித்தார். இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் புதிகா சம்பத், ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளான இடத்தில் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மீதி உள்ள வீரர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்றார். இந்நிலையில், போர்கப்பலில் இருந்தவர்களில் 87 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சடலங்களை கடலில் இருந்து இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மேலும் 32 பேரை இலங்கை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மீதமுள்ள 61 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலில் அவர்களை தேடும் பணியில் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கிடையே ஈரான் போர்கப்பல் கடலில் முழுவதும் மூழ்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்த ஈரானிய போர் கப்பலை அமெரிக்க கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை வீசி மூழ்கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஐ.ஆர்.ஐஎஸ் டேனாவில்… மொத்த வீரர்கள் 180 உயிருடன் மீட்பு 32 சடலங்கள் மீட்பு 87 மாயமானவர்கள் 61

* மூழ்கடித்தது நாங்கள்தான் வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவ அமைச்சர்
இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் நேற்று பென்டகனில் நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச நீர் வழி பாதுகாப்பானது என்று நினைத்த ஈரானிய கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது. நீர்மூழ்கியில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை மூலம் அந்த கப்பல் தாக்கப்பட்டது என்றார். கப்பலை நீர்மூழ்கியில் இருந்து ஏவுகணை வீசி அழித்த வீடியோ காட்சியை அமைச்சர் வெளியிட்டார்.

Tags : US ,India ,Colombo ,Indian Ocean ,southern Sri Lanka ,
× RELATED இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது...