- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆங்கில அருங்காட்சியகம்
- இந்தியா
- லண்டன்
- ஆஷ்மோலியன் அருங்காட்சியகம்
- இங்கிலாந்து
- திருமங்கை ஆழ்வார்
- தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவில்
- திண்டுக்கல் மாவட்டம்
லண்டன்: இங்கிலாந்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்த வெண்கல சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலை கடந்த 1957ம் ஆண்டு திருடு போனது. 16ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலைக்கு பதிலாக போலியாக வேறொரு சிலை அந்த இடத்தில் வைக்கப்பட்டது. ஜே.ஆர்.பெல்மான்ட் என்பவரின் அபூர்வ பொருள்கள் பட்டியலில் திருமங்கை ஆழ்வார் சிலை இடம்பெற்றிருந்தது.
இந்த சிலையை கடந்த 1967ம் ஆண்டு சோதோபிஸ் ஏலம் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் வாங்கியது. பின்னர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், தன்னார்வல ஆராய்ச்சியாளர் ஒருவரால் திருமங்கை ஆழ்வார் சிலை தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் ஆஷ்மோலியன் அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்த அருங்காட்சியக நிர்வாகிகள், அதற்கான உரிய ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டு கொண்டனர்.
அதன்படி, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்று கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள், திருமங்கை ஆழ்வார் சிலையை திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த விழாவில் திருமங்கை ஆழ்வார் சிலை முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்படும் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
