×

வளைகுடாவில் முடங்கிய விமான சேவை தனி விமானங்களுக்கான கட்டணம் ரூ.2 கோடியாக உயர்வு

துபாய்: ஈரான் போர் காரணமாக துபாய், அபுதாபி, கத்தாரின் தோஹாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக்கான விமான பயணிகள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனி சொகுசு விமானங்களான சார்ட்டர் விமானங்களுக்கான கட்டணம் தாறுமாறாக எகிறி உள்ளது. ஓமனின் மஸ்கட், சவுதியின் ரியாத் உள்ளிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதனால் துபாயில் இருப்பவர்கள் சாலை மார்க்கமாக 4 மணி நேரம் பயணித்து மஸ்கட்டுக்கோ அல்லது 10 மணி நேரம் பயணித்து ரியாத்துக்கோ வந்து தான் தனி விமானத்தில் வர முடியும்.

பொதுவாக ரியாத்தில் இருந்து போர்ச்சுகலின் போர்டோவிற்கு 16 பயணிகள் பயணிக்கும் தனியார் சார்ட்டர் விமான கட்டணம் ரூ.1 கோடி இருக்கும் நிலையில் தற்போது அது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. சிலர் சாலை வழி பயணத்திற்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களின் உதவியை நாடுகின்றனர். இவர்கள் கார் அல்லது சொகுசு பஸ்களில் பயணிகளை பத்திரமாக மஸ்கட் அல்லது ரியாத்துக்கு அழைத்து வருகின்றனர். இதற்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவிடுகின்றனர்.

இதுபோல 200க்கும் மேற்பட்டோரை பத்திரமாக விமானம் ஏற்றி விட்டிருப்பதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான அல்மா ரிஸ்கின் இயக்குனர் இயன் மெக்கால் கூறி உள்ளார். துபாயை சேர்ந்த ஏர் சார்ட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்னா கூறுகையில், ‘‘பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சூழல் காரணமாக கட்டணம் அதிகரித்துள்ளது. தனி விமானங்களில் பறக்கும் பயணிகள் தங்களால் முடிந்த வரையில் பிற பயணிகளையும் அழைத்துச் சென்று உதவ முயல்கின்றனர். ’’ என்றார்.

Tags : Gulf ,Dubai ,Abu Dhabi ,Doha, Qatar ,Iran war ,
× RELATED இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது...