விருத்தாசலம், மார்ச் 2: விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணை பிளக்க வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 2 ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்டது. பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பது ஐதீகம்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த வருடம் 12 நாட்கள் நடைபெறும் மாசிமகத்திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் திருவிழாவாக நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காண்பிக்க விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
தொடர்ந்து விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், திமுக நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் பழனியம்மாள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர். விருத்தாச்சலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன், தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
