திருவனந்தபுரம்: பேயை விரட்டுவதாக கூறி 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த கோயில் பூசாரிக்கு சாகும்வரை இரட்டை ஆயுள் சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலப்பன். அவரது மகன் பினீஷ் (45). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் திருவல்லம் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண், 9ம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளுடன் பூசாரி பினீஷை சந்திப்பதற்காக வந்தார்.
அப்போது மகளுக்கு தேர்வு பயம் இருப்பதாகவும், அதை போக்குவதற்காக சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உடனே சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதால் தனது அறையில் வைத்து பூஜை நடத்தவேண்டும் என்று பூசாரி பினீஷ் கூறினார். அதற்கு சிறுமியின் தாயும் சம்மதித்தார். தொடர்ந்து கோயிலை ஒட்டியுள்ள அறைக்கு சிறுமியை பூசாரி பினீஷ் அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் ஆடைகளை களைந்து பிறப்புறுப்பில் சிறிய மர பொம்மை, ஆணி, நாணயங்களை திணித்து சித்திரவதை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அறையில் இருந்து சிறுமியை வெளியே அழைத்து வந்த பூசாரி பினீஷ், பூஜை நடத்தி பேயை விரட்டி விட்டதாக தாயிடம் கூறியுள்ளார். இதன் பிறகு அந்தப் பெண் தனது மகளை அழைத்துச் சென்றார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிறுமியின் தேர்வு பயம் குறையவில்லை. தொடர்ந்து சிறுமியின் தாய், மகளை அருகிலுள்ள மனநல மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டரிடம் தன்னை பூசாரி கொடுமைப்படுத்தியது குறித்து சிறுமி கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் திருவல்லம் போலீசார் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பூசாரி பினீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷிபு, பூசாரி பினீஷுக்கு சாகும்வரை ஆயுள் சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
