×

தேர்தல் ஆணையம் பாமக சின்னம் தொடர்பான கடிதத்தை அன்புமணிக்கு அனுப்பியதை எதிர்த்த ராமதாஸ் வழக்கு வாபஸ்

சென்னை, பிப். 28: பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது தொடர்பாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்து தனது முகவரிக்கு கடிதம் அனுப்புமாறு உத்தரவிடக் கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக அன்புமணி போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். கட்சி நிறுவனர் என்ற முறையில் எனது அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது. கட்சி தொடர்பான கடிதங்கள் எனது முகவரிக்குத்தான் வரவேண்டும். எனவே, அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், ராமதாசின் வழக்கறிஞர் அருள் நேற்று தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Ramadoss' ,Election Commission ,Anbumani ,PMK ,Chennai ,Ramadoss ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...