சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக கட்சிகள் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. திமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தி முடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் அடங்கிய குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி, பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
பின்னர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: பேச்சுவார்த்தை மிக சுமுகமாக, மகிழ்வாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் அடுத்து அடுத்து பேச இருக்கிறோம். மீண்டும் நாங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் போது உங்களை சந்திக்கிறோம். எவ்வளவு இடங்கள் என்பது அடுத்தக்கட்டம். முதலில் எண்ணிக்கை சம்பந்தமான பேச்சுவார்த்தை தொடர்கிறது. நிறைய கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை என்றார்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெ.சண்முகம் அளித்த பேட்டியில், ‘‘திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றது. ஓரிரு நாட்களில் மீண்டும் பேசுவதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம். கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானித்து இருக்கிறது. தொகுதியை குறைத்து கொள்ளுமாறு திமுக குழு எங்களுக்கு எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான குழுவினரும் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு ஈ.ஆர்.ஈஸ்வரன் அளித்த பேட்டியில், ‘‘எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது இயற்கையான எண்ணம். எங்கள் கட்சியினருக்கும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கேற்ப தொகுதிகளை திமுக குழுவிடம் கேட்டிருக்கிறோம்” என்றார்.
