நாமகிரிப்பேட்டை, பிப்.28: தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணியை ராஜேஸ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடர்பாளையத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.47 லட்சத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் பேசுகையில், `நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை -எளிய மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும், இப்பகுதியில் குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. பொதுமக்களின் நலன் கருதி தற்போது ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் திமுக அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, பிடிஓக்கள் கிருஷ்ணன், பசுபதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் இளையப்பன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
