×

மல்லசமுத்திரம் அருகே மொபட் மீது கார் மோதி அதிமுக தொண்டர் பலி

மல்லசமுத்திரம், பிப்.26: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மாமுண்டி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு(40). அதிமுக தொண்டரான இவர், கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக சந்திரம்பாளையம் பகுதிக்கு சென்றார். விழா முடிந்து டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நல்லாகவுண்டம்பாளையம் பிரிவுரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சேட்டுவை அந்த வழியாக வந்த கந்தவேல் என்பவர் மீட்டு, சாதாரண காயம் என நினைத்து, அங்குள்ள கலையரங்கில் படுக்க வைத்து விட்டு சென்று விட்டார்.

அங்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்தவாறு கிடந்த சேட்டுவை கண்டு உறவினர்கள் திடுக்கிட்டனர். உடனே, அவரது மனைவி புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சேட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் விரைந்து சென்று சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பாலமேடு பகுதியைச் சேர்ந்த காபி பார் உரிமையாளரான சண்முகம் என்பவரை தேடி வருகின்றனர். உயிரிழந்த சேட்டுவிற்கு நிதிஷ்(13) என்ற மகனும், மெகன்யா(9) என்ற மகளும் உள்ளனர்.

Tags : AIADMK ,Mallasamuthiram ,Settu ,Mamundi Agraharam ,Namakkal district ,Chandrampalayam ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி...