அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், பாஜ 93 , அசாம் கனபரிஷத் 22 , ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் 11 இடங்களில் போட்டியிட்டு பா.ஜ 60, அசாம் கனபரிஷத் 9, ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி 6 இடங்களை வென்றன. இப்போது தொகுதி பங்கீட்டில் சிக்கல் வந்துள்ளது. அசாம் கனபரிஷத் கட்சிக்கு இம்முறை 22 தொகுதிகள் ஒதுக்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் தொகுதி பிரச்னையில் கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் அசாம் மாநிலங்களவை எம்பிக்களான பாஜவைச் சேர்ந்த புவனேஸ்வர் கலிதா, ராமேஸ்வர் டெலி மற்றும் சுயேச்சை உறுப்பினர் அஜித் குமார் பூயான் ஆகியோர் பதவி காலியானதால் அந்த இடங்களுக்கு மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
அதை குறிவைத்து தொகுதி பங்கீடு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மலை மாநிலங்களவை வேட்பாளராக ஆதரிக்குமாறு காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரச்னையில் முதல்வர் ஹிமந்தா தவித்துப்போய் இருக்கிறார். அவர் கூறுகையில்,’எல்லாம் சரியான திசையில் நகர்கிறது. மார்ச் 15-16 க்குள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.
