புதுடெல்லி: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவை தொடர்ந்து ஸ்விக்கியும் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஸ்விக்கி கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அந்த நிறுவனம் தற்போது ஒரு ஆர்டருக்கான கட்டணத்தை ஜிஎஸ்டி உள்பட ரூ.17.58 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வினால் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. இது சுமார் 17% உயர்வாகும்.
கடந்த வாரம் சோமேட்டோ தனது தளக் கட்டணத்தை சுமார் 19 % உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோமேட்டோ நிறுவனம் தனது கட்டணத்தை ரூ.2.40 உயர்த்தி ரூ.14.90 ஆக அதிகரித்துள்ளது. வரிகளை சேர்த்தால் இரண்டு நிறுவனங்களின் கட்டணமும் ஏறக்குறைய சமமாகவே இருக்கும்.
மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. கட்டண உயர்வால், இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கான உணவு விநியோகச் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
