×

மேற்கு ஆசியா போரின் நீண்டகால தாக்கங்களை சமாளிக்க நிபுணர்களின் 7 குழுக்கள் அமைப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரின் நீண்ட கால தாக்கங்களை சமாளிக்க நிபுணர்கள், அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி அறிவித்தார். மேற்கு ஆசியா போரின் தாக்கங்கள் மற்றும் அதை சமாளிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்த பிரதமர் மோடி மாநிலங்களவையில் நேற்று பேசியதாவது:

மேற்கு ஆசியா போர், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஏற்படுத்தி வருகிறது. போரின் சூழ்நிலை தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது. எந்தவொரு எதிர்பாராத நிகழ்விற்கும் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கு ஆசிய நெருக்கடி ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டது. அதற்கேற்ற தனித்துவமான முறையில் அதற்கான தீர்வுகள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியின் குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால விளைவுகள் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கையாள்வதற்காக அரசு விரிவான உத்தியுடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் சவால்களை எதிர்கொள்ள தேசிய அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் உதவின.

இதே போல, மேற்கு ஆசியா போரின் தாக்கங்களை சமாளிப்பதற்கான உத்திகளை வகுக்க நிபுணர்கள், அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலிகள், பெட்ரோலியம் மற்றும் டீசல், உரங்கள், இயற்கை எரிவாயு மற்றும் பணவீக்கம் போன்ற முக்கியப் பிரச்னைகளில், உடனடி மற்றும் நீண்ட கால உத்திகளின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தக் குழுக்களுக்கு வழங்கப்படும்.

இதுதவிர, இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளில் உள்ள சிரமங்களை மதிப்பிடுவதற்கும், தேவையான தீர்வுகளை வகுப்பதற்கும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. வரவிருக்கும் காலகட்டம் நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சோதனையாக அமையும். இதை நாம் கடந்து வெற்றி பெற மாநிலங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். கண்காணிப்பு வழிமுறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும். கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல் புகார்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டதைப் போல டீம் இந்தியா உணர்வுடன் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப்போரின் பாதகமான விளைவுகள் நீண்ட காலத்திற்குத் தொடரக்கூடும் என்பதால் அரசு மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளது. எதற்கும் தயாராக இருக்கிறது. உத்திகளை வகுப்பதிலும், ஒவ்வொரு முடிவையும் எடுப்பதிலும் அரசு மிகுந்த தீவிரத்தன்மையுடன் செயல்படுகிறது. இந்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முதன்மையானது. இதுவே எங்களின் அடையாளம், இதுவே எங்களின் பலம்.

ஒவ்வொரு சவாலையும் நாம் பொறுமை, நிதானம் மற்றும் அமைதியான மனதுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்தக் கூட்டு முயற்சிகள் மூலம், தற்போது நிலவும் சூழ்நிலைகளை நம்மால் திறம்படக் கையாள முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இனிவரும் காலங்களில் நமது அனைத்து தீர்வுகளுக்கும் தற்சார்பு மட்டுமே ஒரே வழி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags : West Asia war ,PM ,Modi ,Rajya Sabha ,New Delhi ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...