×

அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை பிரதமர் செய்வார்: ராகுல்காந்தி சாடல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி: பிரதமரின் நிலைப்பாட்டில் சமரசம் ஏற்பட்டால் நமது வெளியுறவுக் கொள்கையிலும் சமரசம் ஏற்பட்டதாகவே அர்த்தம். அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு இடைத்தரகராகச் செயல்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நமது வெளியுறவுக் கொள்கை என்பது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையாகவே உள்ளது. இதன் விளைவுகளை நீங்களே காணலாம். அனைவரும் இதை ஒரு உலகளாவிய நகைச்சுவையாகவே கருதுகின்றனர். திரு. மோடியால் எதனை செய்ய முடியும், எதனை செய்ய முடியாது என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு துல்லியமாக தெரியும். பிரதமரின் நிலைப்பாட்டில் சமரசம் செய்யப்பட்டால் நமது வெளியுறவுக் கொள்கையிலும் சமரசம் ஏற்பட்டதாகவே அர்த்தம் என்பது மிகத் தெளிவானது. பிரதமர் சம்பந்தமில்லாத உரையை ஆற்றினார்.

அவர் இந்தியாவின் பிரதமர். அவர் இந்தியாவின் பிரதமராகவே காட்சியளிக்க வேண்டும். ஆனால் அவரிடம் அதற்கான எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. இது மக்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.  இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எல்பிஜி, பெட்ரோல், உரங்கள் என அனைத்தும் எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கும். கொரோனா தொற்று காலத்தை போன்ற ஒரு காலம் மீண்டும் வரப்போகிறது.

ஆனால் அப்போது என்ன நடந்தது என்பதையும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதையும் எத்தனை துயரங்கள் அரங்கேறின என்பதையும் அவர் மறந்துவிட்டார். இத்தகைய முக்கிய பிரச்னைகள் குறித்து அரசுக்கு எந்தவித புரிதலும் இல்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் என்ன சொல்கின்றனவோ அதைத்தான் பிரதமர் செய்வார். அவர் இந்தியாவின் நலனுக்காகவோ அல்லது இந்திய விவசாயிகளின் நலனுக்காகவே செயல்பட மாட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இடும் கட்டளையின்படியே அவர் செயல்படுவார். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

* திருநங்கைகளுக்கு எதிரான சட்டம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு)திருத்த மசோதா 2026 என்பது திருநங்கைகளின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் தனித்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த பிற்போக்கு மசோதா திருநங்கைகள் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமையை பறிக்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்” என்றார்.

Tags : PM ,America ,Israel ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Delhi ,Pakistan ,
× RELATED படப்பிடிப்பின் போது டைரக்டர்...