ராயக்கோட்டை, பிப்.27: ராயக்கோட்டையில், புளி விளைச்சல் அதிகரித்த நிலையில், விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூக்கள் மற்றும் தக்காளி சாகுபடி பிரதானமாக இருக்கிறது. இதை தவிர்த்து புளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் புளி விளைச்சல் அதிகமாக இருப்பதால், விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் போன்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது பட்டை தட்டாத கொட்டை புளியை, புளி வியாபாரிகள் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை தரத்திற்கேற்ப வாங்கி, அதனை வெயிலில் காய வைத்து பட்டை தட்டி, பட்டையை நீக்கி ஏ.சி. குடோன்களில் வைக்கின்றனர். தேவையான போது புளியை எடுத்து வந்து நசுக்கி, நார் மற்றும் கொட்டை நீக்கி, சப்பாத்தி போலவும், பூ புளி, கிச்சிடி புளி என்று விற்பனை செய்கின்றனர். இவ்வாறு தயார் செய்த சப்பாத்தி புளி கிலோ ரூ.90க்கும், மற்ற புளி ரூ.100க்கு மேலாகவும் விற்பனை செய்து வந்தனர். இந்த வருடம் புளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், கர்நாடகா, ஆந்திர மாநில புளியும் விற்பனைக்கு வந்தால் விலை மேலும் குறையும் என்று கூறுகின்றனர்.
