சட்டமன்ற தேர்தல் உள்நோக்கத்துடன் கடன் தள்ளுபடி கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகை ₹2,000 கோடி இதுவரை வழங்காதது ஏன்?

* கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கேள்வி

* அதிமுகவினரே பயனடைவதாக குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, பிப்.9: கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகை ₹2 ஆயிரம் கோடியை இதுவரை வழங்காதது ஏன்? என்று தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் ₹12,110 கோடியை தள்ளுபடி செய்வதாக, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது, சட்டமன்ற தேர்தலுக்காக உள்நோக்கத்துடன் வெளியான அறிவிப்பாகும். கூட்டுறவு வங்கிகளில் ஆளும் கட்சியை சார்ந்த அதிமுகவினரே தலைவர், இயக்குனராக பெரும்பான்மையாக நியமித்துக்கொண்டனர். எனவே, பல்வேறு முறைகேடுகள் மூலம் விவசாயிகள் என்ற பெயரில் அதிமுகவினருக்கு மட்டுமே அதிகளவில் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கடன் தள்ளபடி என்று முதல்வர் அறிவித்திருப்பதால், அதிமுகவினர் வாங்கிய கடனை தான் அதிகமாக தள்ளுபடி செய்யப்போகின்றனர். 70 சதவீத விவசாயிகளுக்கு பலனளிக்க போவதில்லை. ஒட்டு மொத்த விவசாயிகள் மீது அக்கறையிருந்து, அவர்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதை செய்யாமல் தடை உத்தரவு வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் 70 சதவீத விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன் மற்றும் பட்டா, சிட்டா, அடங்கல் கொடுத்து பயிர் சாகுபடிக்காக வாங்கிய நகை கடனை தள்ளுபடி செய்ய செய்திருக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு, தற்போது தள்ளுபடி செய்திருப்பது ஏன்?. கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ₹2 ஆயிரம் கோடி கிடப்பில் உள்ளது. பலமுறை கேட்டும் அரசு வழங்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான பணத்திலும் ஊழல் முறைகேடுகள் நடந்திருக்கிறது. பயிர் சாகுபடியில் பாதித்த விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கப்பெறாததை அரசு கண்டுகொள்ளவில்லை. கடன் தள்ளுபடி என்ற பெயரில், அதிமுகவினர் கூட்டுறவு வங்கிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, உழவுப்பணி என்ற பெயரில் முறைகேடாக வாங்கிய கடன்களைத்தான் தள்ளுபடி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: