போச்சம்பள்ளி, பிப்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஒரு மான் வனப்பகுதியை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது, மத்தூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் இருந்த கம்பிவேலியில் மாட்டி கொண்டு பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை எடுத்து சென்று, பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `கோடை காலங்களில் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள், குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் போது கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழப்பதும், வேட்டைகாரர்களிடம் சிக்குவதும் வழக்கம். தற்போது, சுட்டெரிக்கும் வெயிலால் நீர் நிலைகள் வறண்டு வருகிறது. எனவே, வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வருவதை தடுக்க, தண்ணீர் குட்டைகள், குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும்,’ என்றனர்.
