×

நிதி அகர்வால் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தற்போதைய தமிழ் சினிமாவின் இளம் நடிகைளில் நிதி அகர்வாலும் ஒருவர். இவர், மாடல் மற்றும் பாலே, கதக் போன்ற நடனக் கலைஞர் என பல முகங்களை கொண்டவர். “முன்னா மைக்கேல் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழில் ஈஸ்வரன் திரைப்படம் மூலம் களமிறங்கினார். நிதி அகர்வாலின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

நாம் எப்போதும் அழகாக தெரியவும், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. இதற்காக தினசரி குறைந்தது 40 முதல் 45 நிமிடங்கள் ஜிம்மில் புல்-அப்ஸ் மற்றும் வெயிட் லிப்டிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். மேலும், ஸ்குவாட்ஸ் கால்கள் மற்றும் தொடைகளை வடிவமைக்க உதவுகிறது. இது தவிர, கொரோனா லாக்டவுன் காலத்தில் இருந்து யோகா பயிற்சிகளையும் எனது தினசரி வழக்கமாக வைத்துள்ளேன்.

டயட்

பொதுவாக ஃபிட்னெஸில் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு உணவு பழக்கமும் முக்கியமாகும். எனவே, எதற்காகவும் காலை உணவை நான் தவிர்ப்பதில்லை. அதற்காக ஹெவியாக சாப்பிட மாட்டேன். ஓட்ஸ் போன்ற மிதமான கலோரியுள்ள உணவுகளோடு காலை நேர உணவை முடித்துவிடுவேன். மதிய உணவில் சாதம் அல்லது சப்பாத்தி, காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வேன்.

இரவில் மிகவும் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வேன். ஏனென்றால், ஹெவியான உணவை எடுத்துக் கொண்டால் அது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, வதக்கிய காய்கறிகள் மற்றும் கிரில் செய்யப்பட்ட மீன் போன்றவற்றை சாப்பிடுவேன்.

பியூட்டி

நடிகையாக இருப்பதால், தினசரி மேக்கப் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதே சமயம், தினசரி போட்டுக் கொள்ளும் மேக்கப்பை முறையாக அகற்றுவதும் முக்கியமானது. எனவே, கனமான மேக்கப்பை அகற்ற, ஐஸ் தெரபி பயன்படுத்துகிறேன். இது சருமத்தை மென்மையாகவும் வைத்துக் கொண்டு, புத்துணர்ச்சியை தருகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் போன்ற இயற்கை பொருட்களையும் பயன்படுத்துவேன்.

இதுதவிர, சரும பராமரிப்புக்காக தேன், எலுமிச்சை மற்றும் தயிர் கலந்து எளிய ஃபேஸ்பேக் பயன்படுத்துவேன். இது சருமத்தை பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. மேலும், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினசரி உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். பழங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.அதுபோன்று, உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்க, தினசரி எலுமிச்சை சாறு குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளேன்.

மாடல் மற்றும் நடிகை என்பதால், அதிக மேக்கப் காரணமாக சருமம் பாதிக்கப்படும். இதற்கு ஐஸ் தெரபி பயன்படுத்துகிறேன். அதாவது, ஒரு துணியில் ஐஸ் க்யூப்ஸை வைத்து முகத்தில் மெதுவாக அழுத்தினால், சருமம் புத்துணர்ச்சி பெறும் மற்றும் கண் வீக்கம் குறையும்.அதுபோன்று சூட்டிங் நேரத்தில் அதிக வெயில், மழை என்று எதையும் பார்க்காமல் நடிக்க வேண்டியது இருப்பதால், சூரிய கதிர்களால் ஏற்படும் டானை அகற்ற, தக்காளி துண்டுகளை கால்கள், கைகள் மற்றும் உடலில் 5 நிமிடங்கள் தடவி வைத்திருந்து பின்னர் அலசுவேன். இது சருமத்தை இளமையாகவும் டான் இல்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Tags : Nidhi Agarwal ,Kungumam ,Dr ,Nithi Agarwal ,Kathak ,Bollywood ,Michael ,
× RELATED உணவும் குணமும்!