×

சுரங்கத்துறை இயக்குநர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: ஒடிசாவில் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி வந்தார். இவர் நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் நிலக்கரி கிடங்கு மற்றும் போக்குவரத்து அனுமதி வழங்குவதற்காக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்த வலையில், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது அவர் கையில் களவுமாக பிடிபட்டார்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, புவனேஸ்வர், பத்ரக் மற்றும் கட்டாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில், இன்று புவனேஸ்வரில் உள்ள மொகந்தியின் குடியிருப்பில் டிராலி பேக்குகள் மற்றும் அலமாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தவிர, 1.20 லட்சம் ரூபாய் அவரது அலுவலக மேஜையிலிருந்தும், 130 கிராம் தங்க நகைகளும் கண்டறியப்பட்டன. மேலும், புவனேஸ்வர் பஹலா பகுதியில் சுமார் 2,400 சதுர அடியில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு மாடி பங்களா உட்பட பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags : Odisha ,Bhubaneswar ,Anti-Corruption Police ,Deputy Director ,Mines of ,Devaprata Mohanty ,Mines ,Cuttack Zone ,
× RELATED மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால்...