×

ஏரி பாசனத்தில் செழித்து வளர்ந்த நெல் பயிர்

போச்சம்பள்ளி, பிப்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாக 26,924 ஏக்கர் நிலமும், கால்வாய் பாசனம் மூலம் 25,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றையொட்டி கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம், பையூர், காவேரிப்பட்டணம், நெடுங்கல், பேரூஅள்ளி, பாரூர், பண்ணந்தூர், தாதம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருபோக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாரூர் பெரிய ஏரி மற்றும் பெணுகொண்டாபுரம் பெரிய ஏரி மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதன்மூலம் நெல் பயிர்கள் செழித்து வளர்ந்து எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என காணப்படுகிறது.

தற்போது, களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதன் மூலம் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு நெல் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன் கூறுகையில், பெணுகொண்டாபுரம் பெரிய ஏரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒட்டப்பட்டி, மாதம்பதி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி நீரை நம்பி 2ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் செழித்து வளர்ந்துள்ளது. இதனால், கடந்தாண்டை காட்டிலும் நெல் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

Tags : Pochampally ,Krishnagiri district ,Thenpennai river ,Krishnagiri Dam ,Thimmapuram ,Payyur ,Kaveripatnam ,Nedungal ,Perualli ,Parur ,
× RELATED மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு