ஒடுகத்தூர், பிப்.25: ஒடுகத்தூர் அருகே நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் 1 சவரன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்ற ‘டிப் டாப்’ ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் அருகே உள்ள குறவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வன்(42), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி(35). இந்த நிலையில் வழக்கம்போல் செல்வன் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டார். மனைவி நந்தினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ‘டிப் டாப்’ உடை அணிந்து கொண்டு வந்த 2 வாலிபர்கள் நந்தினி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும், நந்தினியிடம் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தால் கொண்டு வாருங்கள் அதனை நாங்கள் இலவசமாக ‘பாலிஷ்’ போட்டு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் இதனை நம்பாத நந்தினி என்னிடம் நகைகள் ஏதும் இல்லை. நீங்கள் இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனாலும், அந்த ‘டிப் டாப்’ ஆசாமிகள் அங்கிருந்து செல்லாமல் நந்தினியின் கையில் ஏதோ ‘கெமிக்கல்’ போன்று கொடுத்து நீங்களே உங்கள் நகையை பாலிஷ் போடுங்கள் என்று கூறியுள்ளனர். அதனை, நம்பி நகையை எடுத்து வந்து அந்த கெமிக்கலை கையில் வாங்கிய சிறிது நேரத்திலேயே நந்தினி மயங்கியுள்ளார்.
பின்னர், அந்த மர்ம ஆசாமிகள் 1 சவரன் நகை மற்றும் கால் கொலுசுகளை திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். பின்னர், சுய நினைவிற்கு வந்த நந்தினி தனக்கு நடந்தது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வன் நேற்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறி டிப் டாப் ஆசாமிகள் நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
