×

நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் தந்தையை சுட்டு கொன்று துண்டு துண்டாக்கிய மகன்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: லக்னோவில் வாலிபர் ஒருவர் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் ஆஷியானா பகுதியைச் சேர்ந்த மன்வேந்திர சிங் (49) என்பவர், மருந்து தயாரிப்பு தொழில் செய்து வந்தார். இவரது மகன் அக்சத் பிரதாப் சிங்கை (21) மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்வுகளில் (நீட்) பங்கேற்குமாறு தந்தை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அக்சத் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு ஒருமுறை அவர் வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, அக்சத் தனது தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், தந்தையின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து சதருனா பகுதியில் வீசியுள்ளார். உடலின் எஞ்சிய பாகங்களை வீட்டில் இருந்த நீல நிற பேரலில் மறைத்து வைத்துள்ளார். தனது தங்கை முன்னிலையிலேயே இந்த கொடூரத்தைச் செய்த அக்சத், அவரையும் மிரட்டியுள்ளார்.

மன்வேந்திர சிங் மாயமானதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து லக்னோ போலீஸ் உயரதிகாரி விக்ராந்த் வீர் கூறுகையில், ‘ஆதாரங்களின் அடிப்படையில் அக்சத் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : Need ,Uttar Pradesh ,Lucknow ,Manvendra Singh ,Asiana ,Lucknow, Uttar Pradesh ,
× RELATED பெரியபுலியூர் கிராமத்தில் இளைஞர்களை...