×

கெலமங்கலத்தில் பார் மேலாளர் கொலை கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் விரைந்த தனிப்படை போலீசார்

தேன்கனிக்கோட்டை : கெலமங்கலத்தில், பார் மேலாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கும்பகோணத்திற்கு விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் -ஓசூர் சாலையில் உரிமம் பெற்ற தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இங்கு, கும்பகோணம் தாலுகா சாக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த நயினார்செந்தில் மகன் தினேஷ்குமார்(36) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 23ம் தேதி இரவு 11 மணியளவில், பாரை பூட்டி விட்டு உடன் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து என்பவருடன் அருகில் உள்ள தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓசூரிலிருந்து கெலமங்கலம் நோக்கி பதிவு எண் இல்லாத காரில் வந்த 4 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் தினேஷ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

அதனைக்கண்ட முத்து, அங்கிருந்து தலைதெறிக்க ஓடி விட்டார். இதனிடையே, உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.

தினேஷ்குமார் மீது, சொந்த ஊரான தஞ்சாவூரில் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று உள்ளது. அதனால், அந்த வழக்கு தொடர்பாக முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், டிஎஸ்பி ஆனந்தராஜ் உத்தரவின்பேரில் கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணைக்காக தஞ்சசை மாவட்டம் கும்பகோணத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு, விசாரணைக்கு பின்னர் கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்த விபரங்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் மீட்பு : இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை உத்தனப்பள்ளி நான்கு வழிச்சாலை பாலம் அருகே கொலையாளிகள் வீசி சென்றுள்ளனர். அங்கு, கிடந்த 4 கத்திகளை கெலமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kumbakonam ,Kelamangala ,Kelamangalam-Osur road ,Krishnagiri district ,Kumbakonam Taluga Sakuttai ,
× RELATED நெல்லையில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்