பெரம்பூர்: பாஸ்ட்புட் கடையில் பதுக்கிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்தது சம்பந்தமாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றை ஏராளமானோர் பயன்படுத்துவதாகவும் போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் நேற்றிரவு கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சின்னாண்டி மடம் சந்திப்பு பகுதியில் 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது மெத்தபெட்டமைன் என்ற வகை போதை பொருட்கள் வைத்திருந்தனர். இதையடுத்து இருவரையும் கொடுங்கையூர் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (26), சந்தோஷ் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் கொடுத்த தகவல்படி, கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப் இன்ஸ்பெக்டர் முரளிசங்கர் தலைமையில் போலீசார் சோதனை செய்து அங்கிருந்து 50 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக பாஸ்ட்புட் கடையை நடத்திவந்த கொடுங்கையூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜோசப்பை (23) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல்படி, புழல் திருநின்றநகர் பகுதியை சேர்ந்த மணி என்கின்ற ஓட்டவடமணி (26) என்ற சரித்திர பதிவேடு ரவுடி, மாதவரம் பகுதியை சேர்ந்த திருப்பதி (26), சாலமன் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் ஓட்டவடை மணி என்பவர் பெங்களூரு, கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்று மெத்தபெட்டமைன் போதை பொருளை வாங்கிவந்து பாஸ்ட்புட் கடை நடத்திவந்த ஜோசப் மூலமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. கேரளா, பெங்களூரு பகுதிகளில் ஒரு கிராம் 1500 ரூபாய்க்கு வாங்கி சென்னையில் 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 54 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்தனர்.
