×

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ததும்பும் தமிழ் பெருமிதம் நூல்: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” எனும் நூலை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, அதனை முதல்வர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழியின் – தமிழ் பண்பாட்டின் தனித்தன்மைகள் எல்லாம் மிளிரும் வகையில் உரிய ஆதாரங்களுடன் தமிழ் மக்களும் மற்றவர்களும் அறிந்து உணர்ந்து மகிழ்ந்து பெருமிதம் கொள்ளும் வகையில் இனிய தமிழில் எளிய நடையில் எழுதியுள்ளார். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கீழடி, பொருநை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொன்மைச் சிறப்புகள் வாய்ந்த பொருட்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியகங்களைக் காண்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

அருமை தமிழ் மொழியின் செழுமைகளையும் சிறப்புகளையும் அவ்வப்போது வலியுறுத்தி, பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் ஆற்றியுள்ள பேருரைகள் தொகுக்கப்பட்டு, “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” எனும் பெயரில் அழகிய வடிவில் பல்வேறு வண்ணங்களில் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியகங்கள், புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், குமரிமுனையில் பேரறிவுச் சிலையுடன் கண்ணாடி இழைப்பாலம், வெளியிடப்பட்டுள்ள தமிழ்நூல்கள் முதலான பல்வேறு செய்திகளுடன் வண்ணப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில், தமிழுக்கான அரசாணைகள் இடம்பெற்றுள்ளன.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Minister ,Thangam Thennarasu ,Chennai ,Speaker of ,Legislative Assembly ,Appavu ,Tamil Development… ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை...