×

ஆதரவுலாம் கொடுத்துட்டு என்ன பிரச்னைன்னு கேட்கிறாங்க… இவங்க தொல்ல தாங்கலப்பா… தவெகவினரை கலாய்க்கும் அமைப்புகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்து வருகிறது. விக்கிரவாண்டி, மதுரை, கரூர், சேலம் என்று பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டங்களில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளனர். இது இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சி வரலாற்றிலும் நடக்காத ஒன்று. கட்டுப்பாடு இல்லாத தொண்டர்களும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தலைமையும் இல்லாததே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள், நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதேபோல் கூட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உயிர்பலியோ, இதர பாதிப்புகளோ ஏற்பட்டால் உரிய நேரத்தில் கட்சி நிர்வாகிகள் சென்று ஆறுதல் கூறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. அதேநேரத்தில் தங்களுக்கு தொடர்பே இல்லாத விவகாரங்களுக்கும், போராட்டங்களுக்கும் சென்று வாலண்டரியாக ஆதரவு தெரிவிப்பதும், அதன் மூலம் அரசியல் செய்ய நினைப்பதும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தவெகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ்.

இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போட்டியிட வேண்டும், இதற்காக கட்சி தலைமையின் கவனத்தை எப்படியாவது ஈர்க்கவேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக அரசு அலுவலகங்களுக்கு எம்எல்ஏ போன்ற தொனியில் ஆதரவாளர்களுடன் செல்வது, குழப்ப மூட்டும் கேள்விகளை கேட்டு அதிரவைப்பது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து வருகிறார்.

இதேபோல் சேலம் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கும் தமிழன்பார்த்திபன், எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு வாலண்டரியாக சென்று ஆதரவை திணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பெரும்பாலான நிர்வாகிகள் இதேரீதியில் தான் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இப்படி செல்லும்போது பொதுமக்கள் கேட்கும் முதல்கேள்வியே, ‘‘எங்கள் பிரச்னை தெரியாமல் ஏன் வந்து ஆதரவு தெரிவிக்கிறீர்கள்” என்பது தான்.

சமீபத்தில் கூட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய அரசு கல்லூரி விரிவுரையாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்துக்கு சென்று தவெகவினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அவர்களை போராட்டகாரர்கள் விரட்டியடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தற்போது மாநிலத்திலும், மாவட்டங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது.

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் பலர், நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? கோரிக்கை என்ன? என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அவர்கள் யாரும் வலுக்கட்டாயமாக சென்று ஆதரவு தெரிவிப்பதில்லை. ஆனால், தவெகவினர் அழையா விருந்தாளியாக அனைத்து பிரச்னைகளுக்கும் வந்து தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

ஆதரவு தெரிவித்து விட்டு, அதன் பிறகே என்ன பிரச்னை என்று கேட்கின்றனர். நிர்வாகிகள் கேட்கும் போது, சுற்றியிருப்பவர்கள் போடும் கோஷம் தான் பெரிதாக கேட்கிறது. இதனால் பல அமைப்புகள், ‘எந்த விபரமும் தெரியாமல் எதற்கு ஆதரவு தருகிறீர்கள்? என்ற கேள்வியையே முன் வைக்கின்றனர். ஆனாலும் அவர்கள் கேட்பது போல் கேட்டுவிட்டு ‘மீண்டும் விஜய் வாழ்க’ என்று கோஷம் போட்டு விட்டு செல்கின்றனர். ரசிகர்கள் என்பதால் சினிமா காட்சிகளில் வருவது போல் அவர்கள் அரசியல் செய்வது வேடிக்கையாக மட்டுமே உள்ளது. இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை,’’ என்றனர்.

Tags : Thavekas ,Vijay ,Tamil Nadu Vetri Kazhagam ,Vikravandi ,Madurai ,Karur ,Salem ,
× RELATED கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா...