×

ஒன்றிய அரசின் மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25 வெளியீடு திறன்மிகு வகுப்பறைகளில் தமிழ்நாடு முதலிடம்: திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம் பாஜ ஆளும் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியது

சென்னை: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25-யில், திறன்மிகு வகுப்பறைகளில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டிலுள்ள 82.5 சதவீத அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்து, திறன்மிகு வகுப்பறைகள் கொண்டுள்ளதில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் எனும் சாதனை படைத்துள்ளது.

பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்த திறன்மிகு வகுப்பறைகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருப்பதை இந்த அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில் 57.1 சதவீத பள்ளிகளிலும், மத்தியப்பிரதேச மாநிலத்தில் வெறும் 7.6 சதவீத பள்ளிகளிலும், மகாராட்டிர மாநிலத்தில் வெறும் 4.6 சதவீத பள்ளிகளிலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 3.6 சதவீத பள்ளிகளிலும் மட்டுமே திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற போது, தமிழ்நாட்டில் 43.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்திருந்தன.

தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் தரமான சிறந்த கல்வி கற்று இந்திய அளவில் உயர்ந்து மிளிர்ந்திட வேண்டும் என்னும் உன்னதமான குறிக்கோளோடு அனைத்து வகையிலும் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்கினார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 99 சதவீத பள்ளிகளில் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படுவதன் மூலம் மாணவ, மாணவிகள் எளிதில் சிறந்த கல்வி கற்க முடியும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் எல்லாம் திறன்மிகு வகுப்பறைகளை உருவாக்கினார்.

அதன் பயனாக 2021-22ம் ஆண்டில் இருந்த திறன்மிகு வகுப்பறைகள் எண்ணிக்கையைவிட 2 மடங்கு உயர்ந்து 2024-25ல் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைந்துள்ளன. இதனை ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25 குறிப்பிட்டுள்ளது. அண்மைக்காலமாக ஒன்றிய அரசு அமைப்புகள் வெளியிட்டுவரும் ஆய்வு அறிக்கைகள் எல்லாம் தமிழ்நாடே முதலிடம் என்பதனை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவரிசையில், திறன்மிகு வகுப்பறைகளைக் கொண்டுள்ளதிலும் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு என்பதை ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கையும் தெளிவாகப் புலப்படுத்தி உள்ளது.

Tags : EU ,Tamil Nadu ,Crown ,Baja ,Chennai ,Union Government ,
× RELATED கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா...