மதுரை: எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த குருசாமி உள்ளிட்ட சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 299 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த டிச. 21ல் நடந்தது. இந்த தேர்வில் பிரிவு ‘பி’ பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை. மாறாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக இடம் பெற்றிருந்தன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, எஸ்.ஐ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, தேர்வை ரத்து செய்து, முறையாக மீண்டும் மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாது என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப். 24க்கு தள்ளி வைத்தார். அப்போது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.
