புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர். இது ஆய்வு செய்யப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை தலைமைச் செயலகம் கூறி உள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 94-சின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும். முதலில் தீர்மான நோட்டீஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அதில், சபாநாயகருக்கு எதிராக குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டு உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். பின்னர், நோட்டீசில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஆய்வு செய்யப்படும். அவதூறான வார்த்தைகள், மொழிகள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படும். நோட்டீஸ் கொடுத்ததில் இருந்து குறைந்தபட்சம் 14 நாட்களுக்குப் பிறகு அது ஏற்றுக் கொள்ளப்படுவது குறித்து முடிவு செய்து மக்களவையில் விவாதத்திற்கு முன்வைக்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் 50 எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். 50 எம்பிக்கள் ஆதரவு இருந்தால் விவாதம் நடத்தப்படும்.
நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் இனி சபாநாயகர் அவையில் இருந்தாலும் அவையை வழிநடத்த மாட்டார். நேற்றே அவர் அவைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகினார். தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைப்பார். அதிலிருந்து 10 நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் மக்களவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படும்.
