×

தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கி விட்டார் அன்புமணி: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ குற்றச்சாட்டு

 

சேலத்தில் நேற்று பாமக இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ (ராமதாஸ் அணி) நிருபர்களிடம் கூறியதாவது: பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அன்புமணி கூட்டம், அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளது. பாமக தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. மறுசீராய்வு மனு என்பதை 30 நாட்களுக்குள் போட வேண்டும். ஆனால், 72 நாட்களுக்கு பின் இந்த மனுவை தாக்கல் செய்வதன் காரணம் என்ன? பணத்தை கொடுத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர்.

எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தற்போது தேர்தல் ஆணையம் தான் பொய்யான செய்தியை கூறுகிறது. 4.12.25 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் உள்ளது. அந்த தீர்ப்பில், அன்புமணி தான் தலைவர் என்று கூறவில்லை. தீர்ப்பின் பாரா 17, 38ல் மிகத் தெளிவாக ராமதாசும் தலைவர் இல்லை, அன்புமணியும் தலைவர் இல்லை, ராமதாஸ் நிறுவனர் என கூறப்பட்டுள்ளது. மாம்பழ சின்னத்தை உரிமை கொண்டாடும் உரிமை, இருவருக்கும் இல்லை என அப்போது தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் தற்போது, அதனை மாற்றி திருத்தம் செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. இருப்பினும் நீதிமன்றம், ஆணையத்தின் அக்கூற்றை ஏற்கவில்லை.

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து யார் தலைவர் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் எனக்கூறியிருப்பதால், நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை அன்புமணி தலைவர் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், ராமதாஸ் தான் தலைவர் என்று தீர்ப்பு வரும் என நம்புகிறோம். பாமக அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை, அது பதிவு செய்யப்பட்ட கட்சி. அதனால் அந்த கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்ன தேர்தல் ஆணையம், எப்படி தற்போது தலையிடுகிறது.

அன்புமணி தன்னிடம் உள்ள அதிகாரம், பணபலத்தை வைத்து தேர்தல் ஆணையத்தை வளைத்து போட்டுள்ளார். ஒன்றிய அமைச்சராக இருந்தவர். அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இருப்பதால், விலை பேசி இருக்கலாம். தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க அன்புமணிக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்திடம் நீதி, நேர்மை, நியாயம் இல்லை. நம்பகத்தன்மையற்ற ஆணையமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரு வாரத்தில் கூட்டணி அறிவிப்பு

அருள் எம்எல்ஏ கூறுகையில், ‘‘பாமக கூட்டணி குறித்து ராமதாசிடம் பலர் பேசி வருகிறார்கள். ஒரு வாரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்து சொல்வோம். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கதவு தற்போது மூடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும். அன்று கூட்டணி முடிவாகும். உங்கள் முன்பு கையெழுத்திட்டு வெளியிடுவோம். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். சோற்றை ஆக்க பொறுத்தவர்கள், ஆறப்பொறுத்திருக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Anbumani ,Election Commission ,Ramadoss ,MLA ,PMK ,General Secretary ,Arul ,Salem ,
× RELATED நடிகை திரிஷாவை தொடர்புப்படுத்தி...