112. பவாநீ
சென்ற இதழின் தொடர்ச்சி
பவாநீ அல்லது பவாநித்வம் என்று சொன்னவுடனே, ‘‘ஓஹோ… இங்கு நானும் அவனும் வேறில்லை’’ என்கிற நிலையை என்னிடம் கேட்கிறான் போலிருக்கிறது என்று சொல்லி அந்த நிமிடமே அம்பாள் அபேத நிலையை அங்கு பிரசாதிக்கிறாளாம். நாம் என்னவோ அம்பிகையிடம் துவைத நிலையில் நின்றுதான் கேட்கப் போனோம், ஆனால், அவள் நமக்கு துவைத நிலையே தெரியாதபடி மேலான அத்வைத நிலையை அளித்து விடுகிறாள். அதை முதல் இரண்டு வார்த்தைகளிலேயே பிரசாதித்து விடுகிறாள். தன்னுடைய நிலையாகிய சாயுஜ்ஜிய நிலையையே கொடுத்து விடுகிறாள். பவாநித்வம் என்று சொன்னவுடனே, அம்பிகையோடு ஒன்றிப்போய் விடுகிறான். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், இந்திராதி தேவர்களுக்கும் கூட கிடைக்காததை சர்வ சாதாரணமாக அருளி விட்டாள்.
இப்படி ஆச்சரியமான ஒரு ஸ்லோகத்தை ஆச்சார்யாள் சௌந்தர்ய லஹரியில் செய்திருக்கிறார். இதுவே பவாநீ என்கிற நாமத்தினுடைய முக்கிய விஷயமாகும்.இந்த நாமத்திற்கான கோயிலாக திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருப்பாச்சூர் ஆலயத்தைச் சொல்லலாம். இங்குள்ள சிவனுக்கு பசுபதீஸ்வரர், அம்பாளுக்கு பசுபதிநாயகி என்றும் பெயர். பசுபதி நாயகி என்கிற நாமத்தை எடுத்துக் கொண்டு பார்ப்போம். இந்த பவாநீ என்பதில் பவ என்றால் சிவபெருமான் என்றும், இன்னொரு பொருளாக சம்சாரமாகிய பிரபஞ்சமென்றும் பார்த்தோம். இந்த இரண்டையும் இணைத்து வைக்கக் கூடியவள். இந்த இரண்டுக்கும் சக்தி கொடுக்கக் கூடியவளும், இது இரண்டும் வேறல்ல என்று காட்டக் கூடியவளாக அம்பாள் இருப்பதால் அம்பாளுக்கு பவாநீ என்று பெயர் வந்தது என்று பார்த்தோம்.
இந்தத் தலத்தில் அம்பிகை பசுபதி நாயகியாக இருப்பதால், ஒரு பக்கம் பசுக்களாகிய பிரபஞ்சத்தில் சம்சாரத்திலிருக்கக் கூடிய நம்மை தாயாக இருந்து கடாட்சிக்கிறாள். இன்னொரு பக்கம் சிவத்தை, பிரம்மத்தை கடாட்சிக்கிறாள். இறுதியாக இந்த ஜீவபிரம்ம ஐக்கியத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். அதனால், பசுவுக்கும் அதாவது ஜீவாத்மாவிற்கும், பதியிக்கும் நாயகியாக இருப்பதால், பசுவையும் பதியையும் ஒன்று காட்டும் அபேத சொரூபிணீயாக இருப்பதால் அந்த கோயிலில் பசுபதிநாயகி என்ற பெயர் அம்பாளுக்கு இருப்பதால் பவாநீ என்கிற இந்த நாமத்திற்கு இந்த ஆலயத்தைச் சொல்லலாம். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரமும் உண்டு. தீண்டாத் திருமேனி என்று சொல்லக்கூடிய லிங்க மூர்த்தத்தில் ஈசன் அருள்பாலிக்கிறார். தீண்டா திருமேனி என்றால் இந்த லிங்கத்தை தொட்டு பூஜை செய்ய மாட்டார்கள்.
113. பாவநா கம்யா
இதற்கு முன்பு பவாநீ என்கிற நாமத்தைப் பார்த்தோம். அதில் பவாநீத்வம் என்கிற நிலையை அருளுகிறாள் என்று பார்த்தோம். அந்த பவாநீத்வம் என்கிற நிலையை எப்படி இவன் அடைய
முடியும் என்கிற கேள்வி வரும்.பவாநீ என்கிற நாமத்திற்கு முன்னாலேயே அம்பிகையினுடைய ஸ்தூல ரூபம், சூட்சும ரூபம், குண்டலிநீ என்று அதிசூட்சூம ரூபமெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தோம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இவன்போய் நின்றாலே போதும். அவள் அந்த ஐக்கிய நிலையை அனுக்கிரகம் செய்து விடுவாள் என்று பார்த்தோம். எத்தனையோ மார்க்கங்கள் உள்ளன. பக்தி, ஞான, கர்ம, யோக என்று எவ்வளவோ உள்ளன. சாஸ்திரமும், குருவும் இவை அனைத்தையும் தொகுத்து, கண்டெடுத்து நமக்கு ஒரு முக்கிய விஷயத்தை பிரசாதிக்கிறார்கள். அதற்குத்தான் பாவனை என்று பெயர்.
இதென்ன பாவனை… இதென்ன பாவனா… என்றால், அப்போது எது பக்தி? ஆகும். அவனுக்கு ஏக்கத்தோடு சேர்ந்த பக்தி இருக்கிறது. அந்த ஏக்கத்தோடு சேர்ந்த பாவனைதான் பக்தி ஆகும். நாம் செய்ய வேண்டியதில்லை என்று சோம்பேறித் தனத்தில் தப்பித்துக் கொண்டால் அது பாவனை அல்ல. இந்த பக்தியோடு சேர்ந்த பாவனை அபேத பாவனையில் கொண்டுபோய் நிறுத்தும். இப்போது இந்த பாவனையும், பக்தியும் சேர்ந்த விருப்பம் நன்கு கொழுந்து விட்டெறியும். இறுதியாக I am not different from that. நானும் அந்த வஸ்துவும் வேறில்லை என்கிற நிலையில் கொண்டுபோய் நிறுத்தும். இது பாவனையாகவே வரட்டும். அதில் எந்தத் தவறும் இல்லை என்றே சாஸ்திரம் சொல்கிறது.
நான் இந்த ஆத்மா… பிரம்மம் என்று நினைத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் இந்த ஆத்மாவானது பிரம்மம்தான். இப்படி உள்ளார்ந்த எண்ணமாக வரும்போது, அது மனதினுடைய எண்ணமாக இல்லை. அது பாவனையாக வந்துள்ளது. அந்த பாவனையால் அடையப்படுவதால் அவளுக்கு பாவநா கம்யா என்று பெயர். இது ஒரு பாவனை. ஆனால், அம்பாள் எப்படி எடுத்துக் கொள்வாள் எனில், ‘‘இந்த மொத்தப் பிரபஞ்சமும் அம்பாளுடைய பாவனையே ஆகும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அனுக்கிரகம் என்று அம்பாளின் பாவனையால்தான் இதுவே நடந்து கொண்டிருக்கிறது. அவளுடைய பாவனைதான் இந்த மொத்தப் பிரபஞ்சமும். நம்மையும் சேர்த்துதான். நாம் சொல்லக் கூடிய இந்த சரீரம், மனசு முதற்கொண்டு எல்லாமே அவளுடைய பாவனைதான். இவன் இப்போது இந்த individuality யிலிருந்து வெளியே வர வேண்டுமெனில் இவனுமே பாவனைக்குத்தான் வர வேண்டும்.
அம்பிகையினுடைய பாவனை மூலமாக அம்பாள் நம்மிடம் வருகிறாள். நம்முடைய பாவனை மூலமாக நாம் அம்பாளிடம் செல்கிறோம். இரண்டு பாவனையும் ஒரு இடத்தில் தொடும்போது இரண்டும் வேறு இல்லை என்று தெரிந்து விடுகின்றது. சும்மா பாவனை செய்து விட்டால் போதுமா? என்றால் பாவனைக்குள் இத்தனை சரித்திரம் இருக்கிறது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் நேரடியாக அம்பிகையிடம் பேசினார். அவருடைய பாவனையினால் தேவி நேரடியாக வந்தாள். இன்னொரு முறை தீர்க்கமாக புரிந்து கொள்வோம். அவளுடைய பாவனையினால்தான் நான் வந்திருக்கிறேன். நான் அந்த source என்கிற மூலத்தை அடைய வேண்டுமெனில் அந்த பாவனையைத்தான் பிடிக்க வேண்டும். இந்த individual source க்கு போய்விடும்.
சமர்த்த ராமதாஸ் அனுமனை பாவித்து வந்தபோது வால் கூட முளைத்து விட்டதாம். இந்த விஷயத்தைச் சொல்லும்போது, புட்டபர்த்தி பாபாவினுடைய வாழ்விலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்.
சுவாமி ஒருமுறை சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு மாடியில் இருக்கக் கூடிய ஒரு அறையில் தங்கியிருக்கிறார். அந்த அறைக்கு நேர் கீழாக, ஒரு மாணவர் தங்கியிருக்கிறார். இரவு தூங்குவதற்கு முன்பு அந்த மாணவர் அந்த படுக்கையில் படுத்திருக்கிறார். மேலே, பத்தடிக்கு மேல் தளம், சீலிங் இருக்கிறது. அதைத் திறந்தால் பகவான் இருக்கிறார். இதுவொரு பாவனையாக அவருக்குள் நிகழ்கிறது. அதாவது மேலே பத்தடிக்கு மேலே சுவாமி இருப்பதாக நினைக்கிறார். அப்படி மேலே நினைத்துக் கொண்டிருக்கும்போதே… மேலே இருக்கக்கூடிய சுவாமி பத்தடிக்கு கீழே என்னை நோக்கி வந்தால் எப்படியிருக்கும் என்று கண்களை மூடி கற்பனை செய்கிறார்.
சிறிது நேரம் பொறுத்து சுவாமி நம் பக்கத்தில் வந்து அமர்ந்து, தலையை கோதிக் கொடுத்தால் எப்படியிருக்கும். பிறகு ரெண்டு வார்த்தை பேசினால் எப்படியிருக்கும். இப்படியே…. ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கிறது. அப்படியே நினைத்தபடி இருந்தவர் தூங்கி விட்டார். இந்த எண்ணத்திலேயே தூங்கியதால் அடுத்த நாள் காலையில், எழுந்து சுவாமியை தரிசிக்கச் செல்கிறார். சுவாமி, அவரைப் பார்த்து சிரித்தார்.
‘‘நன்றாகத் தூங்கினாயா…’’ என்று கேட்டார்.
‘‘நான் நன்றாகத் தூங்கவில்லையே. நீ என்னை கூப்பிட்டதால் நான் உன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேனே… உன் தலையை தடவியபடி தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேனே… நான் சரியாக தூங்கவில்லை ’’ என்று சுவாமி சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
மாணவருக்கு கண்ணீரே வந்து விட்டது.
‘‘சுவாமி நான் சும்மா நினைத்தேன். Swami I just pretended…. சும்மா ஒரு பாவனையாகத்தான் நினைத்தேன்.’’ அதற்கு சுவாமி, ஆங்கிலத்தில், ‘‘no problem. You can just pretend. Then you will tend. And atlast you end with me” என்று சொன்னார். Pretend – பாவனை. அந்த பாவனை என்ன செய்யுமெனில், அதற்குள் இருக்கும் pre போய்விடும். Tend ஆகும். இங்கு tend என்றால் நம்மை பழக்கப்படுத்துவது. அந்தப் பழக்கப்படுத்துதல் என்பது சாதனை. atlast you end with me என்றால் you will become me. அந்தக் கடைசியில் வரக்கூடிய end இருக்கிறதல்லவா அதுவே மோட்சம் ஞானமாகும். சுவாமி சொல்கிற இந்த வாக்கியம்தான். பாவநா கம்யா ஆகும்.
சைதன்ய மகாபிரபுவிற்கு கோபிகா பாவம். பெரியாழ்வாருக்கு யசோதா பாவனையில்தான் பாடியிருக்கிறார். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக. பராங்குச நாயகியாக பாடியிருக்கிறார்கள். மாணிக்க வாசகர் நாயிகா பாவத்தில் பாடியிருக்கிறார்கள். இது சாதாரண பாவனைதானே என்று எண்ணக் கூடாது. உள்ளிருக்கும் ஒன்று realisticஆக வெளிப்படுகின்றது. நாம் இந்த சரீரத்தையும் மனதையும் பார்த்து இதெல்லாமும்தான் நம்மை சம்ஸாரத்திற்குள் உட்படுத்தி விட்டது என்று சொல்கிறோம். இதை கொஞ்சம் lower ஆக நினைக்கிறோம். கீழானதாக நினைக்கிறேன். சாஸ்திரமானது நம்முடைய மனசு, இந்திரியங்கள், சரீரம் எல்லாவற்றையும் உச்சகட்ட நிலைக்கு மாற்றக் கூடிய ஒரு ரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அது என்னவெனில், இந்த மனசு சரீரமெல்லாம் கீழானது என்று நினைக்கிறாய் அல்லவா? இது எல்லாமே ஸ்ரீசக்ர சொரூபமென்று நமக்கொரு உபநிஷதம் காண்பித்து கொடுக்கிறதல்லவா? அந்த உபநிஷத்திற்கு பாவனோ உபநிஷத் என்று பெயர்.
ஒருமுறை பாவனோ உபநிஷத்தை படித்தாலே போதும். இந்த சரீரத்தை, எண்ண விருத்திகளும் ஸ்ரீசக்ரத்தில் இருக்கக் கூடிய தேவதைகளென்று பாவனோ உபநிஷத் சொல்லும். இந்த நாமத்தின் பெயராலேயே ஒரு உபநிஷத் உள்ளதெனில் இதன் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாமத்திற்குரிய கோயிலை பார்ப்பது முன்பு சிறு விஷயத்தை புரிந்து கொள்வோம். பாவனை என்பதை தினசரி வாழ்வில் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். பாவனை ஒரு செயல்பாட்டின் (process) மூலமாக வருகின்றது. அதென்ன செயல்பாடு எனில், நமக்குள் ஒரு எண்ணம் உண்டாகிறது. அதற்கு விருத்தி என்று பெயர் வைக்கிறோம். ஆங்கிலத்தில் thought என்று சொல்கிறோம்.
இந்த thought சொல்லாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக இந்த எண்ணத்தை கொஞ்சம் பட்டை தீட்டிக் கொண்டே போனால், அந்த எண்ணத்திற்கு ஒரு உருவம் கொடுப்போம். அந்த உருவம் கொடுக்கக் கூடிய சமயத்தில் அதற்கொரு பெயர் வரும். அதற்கு ஆங்கிலத்தில் imagination என்று பெயர். Imagination என்றால், giving an imagination to the thought. இந்த உருவகம் என்பதை சமஸ்கிருதத்தில் கல்பகம் என்று சொல்லலாம். கல்பனா… கல்பிதம்… கற்பனை… தமிழிலும் சொல்லலாம். அடுத்ததாக உணர்வுக்குக் கொண்டு வருகிறோம். Feeling என்று இங்கு சொல்லலாம். இந்த Feeling என்கிற இடத்திற்கு வரும்போதுதான் பாவனா என்கிற பெயர் வருகிறது. பாவனையால் அடையக் கூடியவள் மட்டுமல்ல. அந்தப் பாவனையே அம்பாள். இதற்கு முன்னால் உள்ள கற்பனையும், அதற்கும் முன்னாலுள்ள எண்ண விருத்தியும், அது உற்பத்தி ஆகக்கூடிய மனசும் என்று எல்லாமும் அம்பாள்தான். அதற்கும் ஆதாரமாக உள்ள மனசும் அம்பாள்தான்.
இதற்கு மத்தியில் கல்பனா உள்ளது. ஏனெனில், சகுன தியானம் செய்யும்போது image முக்கியம். இப்படி நமக்கு கற்பனையை உண்டாக்கிக் கொடுப்பதால் அவளுக்கு கல்பகாம்பிகை என்றும், கற்பகாம்பிகை என்றும் அழைக்கிறோம். எனவே, இந்த நாமத்திற்கான கோயிலாக மயிலாப்பூர் கற்பகாம்பாளையும், கபாலீஸ்வரரையும் சொல்லலாம். பக்தனுடைய மனசுக்குள் ஏற்படக் கூடிய உருவகத்தை நேரடியாக உண்டாக்கிக் கொடுப்பதால் கற்பகாம்பிகை என்று பெயர். கற்பக விருட்சம் என்ன செய்கிறது. இவன் என்ன நினைக்கிறானோ…. அதை அப்படியே நேரடியாக உண்டாக்கிக் கொடுக்கிறது. இங்கு கற்பகத் தோட்டத்திலேயே இருக்கிறாள். இவள் கல்பனை, கற்பனை என்கிற பாவனை மூலமாகவும் அடையப்படுவதாலேயே இவளுக்கு கற்பகாம்பாள் என்றும் பெயர்.
(சுழலும்…)
