×

அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சுக்கிரன்!

ஒருவருக்கு சுக்கிரதசை வந்துவிட்டால், அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்று கூறப்படுவர். மனிதனுக்கு வேண்டிய இன்பம், அழகு, செல்வ வசதிகள் பெருகி, மகிழ்ச்சியோடும் காணப்படுவர். ஜாதகத்தில் சுக்கிரதிசை என்றால், நிச்சயம் அவர்கள் “தென் திருப்பேரை’’ ஊருக்குச் சென்று அங்கிருக்கும் பெருமாளை தரிசனம் செய்தால், வாழ்க்கை இன்னும் சுபிட்சமாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில், நவக்கிரக வரிசைப்படி ஆறாவது தலமாக விளங்குவது, தென் திருப்பேரை என்ற கோயிலாகும். இத் தலம் 108 திவ்ய ஷேத்திரத்தில் ஒன்றாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள், “மகரநெடுங்குழைகாதர்’’. இவர், பத்ர விமானத்தின் கீழே கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சி, மிகவும் அற்புதமானது.

இவரை காணும் பொழுது, கண்ணும் நெஞ்சும் பரவசம் அடைகின்றன. மகரம் என்றால் மீன். நெடுங்குழைகாதர் என்றால், திருமாலின் காதில் அணிந்த மகரகுண்டல அணிகலன்கள் என்பது பொருளாகும். ஸ்ரீபேரை என்றால், மகாலட்சுமியின் உடல் என்பது ஐதீகம்.

ஸ்ரீதேவியின் வருத்தம்

ஸ்ரீ விஷ்ணுவின் வலப் பக்கத்தில் அமர்ந்து அருளாட்சி புரியக் கூடியவள்தான் மகாலட்சுமி. ஒரு சமயம் வைகுண்டத்தில் ஸ்ரீதேவி வருத்தத்தோடு இருந்தாள். தன் மீது திருமாலுக்கு அன்பு இருக்கவில்லை, பூதேவியின் மீதுதான் அதீத அன்புடன் நடந்து கொள்வதாக எண்ணி மனம் வெதும்பினாள். ஸ்ரீதேவி பொன்னை போல தகதகவென ஒளி வீசக்கூடியவள். “பொன்ஒளி பூத்தாள்” அருள் ஒளி நிறம் கொண்டவள் என்றும், கருணை அருள் சௌந்தியம் வடிவாக மென்மையான அழகும், பிரகாசமான ஒளியும் மனதை ஈர்க்கும் அழகுடையவள் “கருணை சௌந்தர்யம்” என்று ஆழ்வார்கள் பாசுரத்தில்கூறி உள்ளனர். இப்படிப் பட்டவள் மன வருத்தத்துக்கு காரணம் எதுவோ?

பூதேவியின் நிறம்

இயற்கையில், பூமியின் நிறம் சாம்பலும், கரிய நிறமுமாக இருக்கும். பூமி தாயாகிய பூதேவி, கரிய நிறம் உடையவள். திருமாலும் கரிய நிறம் கொண்டவர். ஆகவே, இருவரும் ஒரே நிறமாக ஒத்து இருப்பதால், தன்னைவிட பூதேவியிடம் அதீத பாசமும் அன்பும் வைத்திருக்கிறார். தன் இதயத்தின் பக்கத்தில் இடப்புறத்தில் சந்தோஷமாக சுமந்து இருக்கிறார் என எண்ணி வருந்தினாள்.

துர்வாசர் வருகை

சிவனின் அம்சமானவர் துர்வாசர். எளிதில் சினம் அடைய கூடியவர். இவர் திருமாலைக் காண வைகுண்டத்திற்கு எழுந்தருளினர். அங்கே ஸ்ரீதேவி மட்டும் தனித்து வாடிய முகத்துடன் காணப்படுவது கண்டு, “என்ன ஆயிற்று?’’ என்று விசாரித்தார். தன் மன ஆற்றாமை யாரிடமாவதுகூற வேண்டும் என காத்திருந்த சமயத்தில், துர்வாசர் வாஞ்சையுடன் கேட்டதும், அவரிடமே நியாயம் கேட்க தன்னுடைய மனதில் உள்ள துயரத்தை அவரிடம் கூறினாள். திருமால், தன் மீது அன்பு கொள்ளாமல் பூதேவியோடு நகர்வலம் சென்றுள்ளார் என வருத்தம் தோய்ந்த முகத்தோடு கூறினார். அதைக் கேட்ட துர்வாசர், “மகளே.. துயரம் வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” பூதேவியை காண புறப்பட்டார், துர்வாசர்.

பூதேவிபெற்ற சாபம்

துர்வாச முனிவர், வைகுண்டம் சென்றடைந்தார். அப்பொழுது பெருமாள், பூதேவியோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். துர்வாச முனிவரை கண்டதும், பூதேவி வணங்கி வரவேற்று உபசரிக்காமல் அசட்டையாக அவரை கண்டு கொல்லாமல் இருந்தாள். இதைக் கண்டு மிகுந்தகோபத்தோடு துர்வாசர், “அழகில் நீ இரு மாப்பு கொண்டு என்னை அவமதிக்கின்றாயா? உனக்கு இருக்கும் இந்த கரிய நிற அழகு போகும், சிவந்த மேனியை பெறுவாய்’’ என பூதேவியை சபித்தார்.

அப்பொழுது, தான் செய்த தவறை உணர்ந்த பூதேவி, துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் கொடுத்த சாபத்திற்கு விமோசனம் என்ன என்று கேட்டாள். மனம் இறங்கிய துர்வாசர், பூவுலகில் தாமிரபரணி ஆற்றங்கரை அருகே ‘பத்ரி வனம்’ என்ற ஒரு இடம் உண்டு. அங்கு, சென்று நீ நதிக் கரையில் மூழ்கி, மகாவிஷ்ணுவை வழிபட்டு தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும். உன்னுடைய எழில் உருவமும் நீ பெறுவாய் என விமோசனத்திற்கு வழி கூறிவிட்டு சென்றார். பூதேவி, தாமிரபரணி ஆற்றில் உள்ள பத்ரிவனம் சென்றடைந்து, அங்கிருக்கின்ற நதியில் மூழ்கி தினமும் “ஓம் நமோ நாராயணா’’ என்ற மந்திரத்தைகூறி தவம் இருந்தார்.

பௌர்ணமியும் தாமிரபரணி ஆறும்

ஒரு நாள், பங்குனி மாதம் பௌர்ணமி நாளில், பூதேவி தாமிரபரணி ஆற்றியில் முழுகி எழும் பொழுது, அவளுடைய கைகளில் இரண்டு மீன் வடிவம் உள்ள இரண்டு மகர குண்டலங்கள் கிடைத்தன. மகர குண்டலங்கள் கிடைத்த அதே நேரத்தில், திருமாலும் பூதேவி முன்பு காட்சி தந்தார். அவள் தவத்தை மெச்சி ஏற்றும் கொண்டார். அக்கணமே தனக்கு கிடைத்த மகர குண்டலங்களை திருமாலிடம் கொடுத்தார். அவர் தம் காதுகளில் அணிந்ததும், அவளின் சிவப்பு நிறத்தை மாற்றி, சுய உருவமான கரிய நிறத்தை பெற்றாள். இது காறும் ஸ்ரீதேவி நிறத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு திருப்பேரை என்றும், திருமால் மகர குண்டலங்களை காதுகளில் அணிந்ததால் மகர நெடுங்குழல்காதர் என்ற திருநாமம் பெற்றார். பின்பு இத்தலத்தில் அவர் தங்கிவிட்டார்.

அந்தண வடிவில் திருமால்

தாமிரபரணி ஆற்றங்கரையை பாண்டிய மன்னன் சுந்தரபாண்டிய மன்னன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் நீதியும் நேர்மையும் தவறாது மக்களை தன் குழந்தைகளாக எண்ணி நல்லாட்சி புரிந்து வந்தார். ஆனால், அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால், நித்தமும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும். பூஜைகள் செய்ய விரும்பினார். காவிரி பாயும் சோழவள நாட்டிலே இருந்து, 108 அந்தணர்களை அழைத்து வந்து திருமாலுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

அதை செய்து முடிக்க எண்ணி 108 அந்தணர்களை அழைத்து வருமாறு அமைச்சர்களுக்கு கட்டளையிட்டார். அந்தணர்களை தேடி சென்ற வீரர்களுக்கு, 107 பேர்கள் மட்டுமே கிடைத்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர். மன்னரிடம் 107 பேர்தான் வந்திருக்கிறார் என்று கூறினால், என்ன கூறுவாரோ என எண்ணி, அச்சத்தில் நடுங்கினர். மன்னர், அந்தணர்களை எண்ணிய பொழுது, 108 அந்தணர்கள் இருப்பதை கண்டு மெய்சிலிர்த்தனர். அது எப்படி? திருமால், வீரர்களின் மனக் கவலையைப் போக்க தானே ஓர் அந்தணராக தோன்றியதாக அவ்வூர் மக்கள்செவி வழி கதையாகக் கூறுவர்.

பத்திரன் கட்டிய விமானம்

அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார். இவரை அசுரகுரு என்றே அழைப்பர். இவரின் மகன் பத்திரன். ஒரு சமயம் துர்வாசர் சுக்ராச்சாரியாரை காணவந்தார். அவரை பத்திரன் அவமானப்படுத்தினார். அதனால், வெகுண்ட முனிவர், பத்ரனுக்கு சாபத்தைக் கொடுத்தார். அறியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிட வேண்டும் என்று அவர் திருவடியில் வணங்கினார். அவர், “நீ அபூர்வமான செயல்செய்ய வேண்டும்’’ என்றார்

“எதுவாக இருந்தாலும் செய்கிறேன், பாவம் நீங்க வழி கூறவும்’’ என மன்றாடினார். திருமாலுக்கு விமானம் அமைத்தால், உன் சாபம் நீங்கும் எனக் கூறியதும், திருமாலுக்கு எங்கே விமானம் அமைப்பது எனத் தேடித் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் திரிந்தார். அப்பொழுது மகர நெடுங்குழைக்காதரை கண்டார். அங்கே தவமிருந்து எம்பெருமானுக்கு விமானம் அமைத்தார். அதனால் இக்கோயிலுக்கு பத்ர விமானம் என்று அழைக்கப்படுகிறது. தல வரலாற்றில் இச்செய்தி உள்ளது.

நாராயண தீட்சிதருக்கு அருள் புரிந்தார்

பண்டைய காலத்தில் மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். அப்பொழுது திருப்பேரையில் நாராயண தீட்சிதர் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். இவர், பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டு, சதாசர்வ காலமும் துதி பாடி கைங்கர்ய சேவையில் ஈடுபட்டு வந்தார். மக்களையும், திருமாலுக்கு செய்யும் கைங்கரிய பணியையும், இரு கண்களாக போற்றியதால், மன்னருக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை கட்ட தவறினார்.

சினம் அடைந்த நாயக்கர் மன்னர், நாராயண தீட்சிதரை சிறையில் அடைத்தார். சிறைச் சாலையில் இருந்த படியே பரந்தாமன் மீது பாமாலை சூட்டி அகம் குளிர்ந்தார். தன் பக்தனின் பக்தியைக் கண்டு பூரித்த பரந்தாமன், அப்பகுதி ஆண்ட மன்னர் நாயக்கர் கனவில் தோன்றினார்.நாராயண தீட்சிதரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அம்மன்னனும் தீட்சிதரை பெருமையை உணர்ந்தார். அவரை விடுதலை செய்தார். தீட்சிதர், மகர நெடுங்குழல்காதரை கண்டு மனம் உருகி பாடல்களை அவர் முன் பாடினார்.

நம்மாழ்வார் திருவடியில் சரணம்

தீட்சிதர் தினமும் ஆழ்வார் திருநகர் சந்நதிக்கு சென்று நம்மாழ்வாரை தரிசனம் செய்து சடாரியும் தீர்த்தத்தையும் பெறுவது வழக்கம். ஒரு நாள், அர்ச்சகர் தீட்சிதருக்காக காத்திருந்தார். அவர் வரவில்லை. தகவல் மட்டும் வந்தது. தீட்சிதர் காலமாகி விட்டார் என்ற தகவல் ஆழ்வார் திருநகருக்கு கிடைத்தது. உடனே திருப்பேரை ஊருக்கு அர்ச்சகர் கிளம்பும் பொழுது, எதிரே நாராயண தீட்சிதர் தோன்றி, அவசர அவசரமாக நம்மாழ்வார் சந்நதியில் நுழைந்து அவர் திருவடியில் சரண் புகுந்ததை அர்ச்சகர் கண்ணால் கண்ட அதிசயம். சரணாகதி அடைந்தவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

வருண பகவான் சாபம் நீங்குதல்

முன்பு ஒரு சமயம் வருண பகவான் தன் குருவான வியாழ பகவானை நிந்தித்தார். அதனால் சினம் அடைந்த குரு, வருணனின் பராக்கிரமங்கள் பலன்கள் அத்தனையும் அழிந்து போகும்படி சாபமிட்டு விடுகிறார். அதற்குப் பிறகு அசுரர்களோடு சேர்ந்து போர் புரிந்தார். குரு சாபப்படியே தன்னுடைய அனைத்து பலத்தையும் வெற்றிகளையும் இழந்து, வருண பாணத்தையும் பாசத்தையும் இழந்து தோற்று விடுகின்றார். இதனால், வருணனின் இருப்பிடத்தில் அசுரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செய்தனர். தன்னிலை கண்டு வருந்திய வருண பகவான், தன் குரு, வியாழ பகவானிடம் தன் தவறுக்கு மன்னிப்புக்கு கேட்டார். குருவும், சீடனின் தவற்றை மன்னித்து சாபவிமோசனம் கிடைக்கும் படி செய்தார்.

“நீ பூவுலகம் சென்று தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பத்ரி வனத்தில், சேவை சாதிக்கும் எம்பெருமானான மகர நெடுங் குழைகாதரை வணங்கி வழிபாடு செய்தால், உன் பாவம் தீரும்’’ என்று வழியும்கூறி, பூவுலகத்திற்கு அனுப்பி வைத்தார். அவ்வாறு வருண பகவான பத்ரிவனத்திற்கு வந்து மகாவிஷ்ணுவை நினைத்து அவருடைய அருளைப் பெற்றார். அதன் பின்பு இழந்த பலங்களையும் வருண பாணத்தையும் அவருக்கு திருப்பி கொடுத்தார் என்பது ஸ்தல வரலாறு.

காணக் கிடைக்காத அபூர்வ காட்சி

பொதுவாக, திருமால் சந்நதியில் கருவறைக்கு நேர் எதிரில் கருடன் வீற்றிருப்பது தொண்டு தொட்டு வரும் பழக்கம். ஆனால், திருபேரையில் கருடன் வித்தியாசமாக தோன்றுவார். சந்நிதானத்தின் கருவறைக்கு எதிரில் உள்ள கருடன் சற்று விலகி காணப்படுவார். காரணம், கோயிலுக்கு எதிரில் உள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடுவதையும், அந்தணர்கள் வேதம் ஓதும் ஒலியும் கேட்டு மகிழ பெருமாளே விரும்பினார். அதனால், கருடனை பார்த்து சற்று விலகி இருக்கச் சொன்னார். இதனை நம்மாழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்;

“ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன்
என்னெஞ்சினூடே பிள்ளைக் கடாக்கின்ற
வாற்றைசக் காணீர் என் சொல்லிச்
சொல்கேன் அன்னைமீர்காள் வெள்ளைச்
சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா
வொலியும் பிள்ளைக் குழா விளை
யாட்டொலியும் அறாத் திருப்பேரையில்
சேர்வன் நானே’’

மூலவர் பெயர்: மகரநெடுங்குழைகாதர்
உற்சவர் பெயர்: நிகரில் முகில் வண்ணன்
தாயார்கள் பெயர்: குழைக்காத வல்லி,
திருப்பேரை நாச்சியார்.
தீர்த்தம்: சுக்கிரபுஷ்கரணி, சங்குதீர்த்தம்.
விமானம்: பத்ர விமானம்.
புராண பெயர்: தென் திருப்பேரை.
கிரகம்: சுக்கிரன் தலம்.

நடை திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை.எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 31 கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடையலாம். அதே போல், தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ., பயணித்தாலும் இக்கோயிலை அடையலாம்.

பொன்முகரியன்

Tags : Venus ,Christ ,South Tirupera ,Perumala ,
× RELATED சம்சார சாகரத்தை தாண்டுவிக்கும் நாமம்