×

தெளிவு பெறுவோம்

?சிலருக்கு ஞானம் உடனடியாகக் கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதிகக் காலம் ஆகிறது. இந்த வேறுபாடு ஏன்?
– சுபராமா, தஞ்சை.

இப்பொழுது நீங்கள் பொறியியல் துறை படிக்கிறீர்கள் என்று சொன்னால் அதற்கான கால அவகாசம் நான்கு வருடம் அல்லது 5 வருடம் என்று வைத்திருக்கிறார்கள். நீங்கள் முறையாகப் படித்தால் ஐந்தாவது வருடத்தில் நீங்கள் பொறியாளர் பட்டத்தைப் பெற்று விடலாம். ஆனால், ஞானம் பெறுவது என்பது அப்படி அல்ல. பக்குவப்பட வேண்டும். அந்தப் பக்குவத்திற்கு ஏற்ற கால அவகாசம் வேண்டும். ஸ்ரீ ரமணர் இதற்கு அற்புதமான ஒரு உதாரணம் கூறுகிறார். வெடி மருந்து உடனே பற்றிக் கொள்ளும். நிலக்கரி பற்றிக் கொள்வதற்கு வெகு நேரம் ஆகும். பக்குவப்பட்டவர்கள் ஞானம் பெறுவதற்கும் பக்குவப்படாதவர்கள் ஞானம் அடைய முயற்சிக்கும் காலத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

?வீட்டிற்கு வெளியே சாங்கியம், சம்பிரதாயம் பார்ப்பது நல்லதா?
– முருகன், சென்னை.

சாங்கியம் என்பது நாம் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடித்து வரும் தார்மீக சம்பிரதாயம் அல்லவா. இதனை கண்டிப்பாக கடைபிடித்துத்தானே ஆகவேண்டும். நம்முடைய சம்பிரதாயத்தை கடைபிடிப்பதற்கு வீட்டிற்கு வெளியே, வீட்டிற்கு உள்ளே என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. உதாரணத்திற்கு நெற்றியில் திருநீறு, திருமண் பூசிக் கொள்வது நம் சம்பிரதாயம் எனும்போது இதனை வீட்டிற்குள்ளே மட்டும்தான் கடைபிடிக்க வேண்டுமா என்ன, வீட்டிற்கு வெளியேயும் அவசியம் கடைபிடிக்கத்தான் வேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும்போது காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்கள் தவிர மற்றவர்கள் நம்முடைய சம்பிரதாயத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும். நம்முடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் அறிவியல் பூர்வமாக அர்த்தமுள்ளவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய சம்பிரதாயமான ஏகாதசி விரதம் என்பது மருத்துவரீதியாக நன்மை தரக்கூடியது என்பதை தற்போது ஆராய்ந்து சொல்லி மேலைநாட்டு விஞ்ஞானிகள் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்பதே இதற்கான சாட்சி. வீட்டிற்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி நம்முடைய சாங்கியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் கிளம்பிய பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
– கிரிதரன், திருவண்ணாமலை.

உங்கள் கேள்வியிலேயே பதிலும் ஒளிந்துள்ளது. பணிக்காக கணவர் அதிகாலையில் வெளியூர் கிளம்புகிறார் என்கிறீர்கள். கோலம் போடுவது என்பதே அதிகாலையில் செய்ய வேண்டிய ஒன்று. ஆக, கணவர் கிளம்புவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? பெண்கள் அதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதிலும்
கவனம் கொள்ள வேண்டும். கணவர் மட்டுமல்ல, பிள்ளைகள் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் எவராயினும் அவர் கிளம்பியவுடன் தலைக்கு குளிப்பதோ வீட்டினை கழுவுவதோ வாசல் தெளிப்பதோ கண்டிப்பாக செய்யக்கூடாது.

?சுண்டுவிரலின் கீழ் மச்சம் போன்ற அடையாளம் இருந்தால் அது எதைக் குறிக்கிறது?
– தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

வலது கையா, இடது கையா என்பதைப் பொறுத்து பலன் மாறுபடும். ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இருந்தால் நற்பலன்கள் நடக்கும். மாறி இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான பலன்கள் நடக்கும். பொதுவாக சுண்டுவிரல் அல்லது அதனை ஒட்டிய கீழ்ப்பகுதியில் மச்சம் இருந்தால் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள் என்பதாக பலன் சொல்லப்படுகிறது. கல்வி அறிவு நிரம்பியவர்களாகவும் மற்றவர்களால் அறிவாளிகள் என்று போற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள். நல்லறிவு காரணமாக அவர்களின் தோற்றம் ஒருவித கம்பீரத்தன்மையுடன் இருக்கும். கற்றோர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பார்கள். தொழில்முறையில் மக்கள் தொடர்பிலும் மார்க்கெட்டிங் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். நவகிரஹங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்யாகாரகன் ஆகிய புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

?கஜேந்திர மோட்சம் கதை எதில் சொல்லப்பட்டிருக்கிறது?
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

கஜேந்திர மோட்சம் எதில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்பதைவிட எதில் சொல்லப்படவில்லை என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். அது பிரதானமாக ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் எல்லா ஆழ்வார்களுமே கஜேந்திர மோட்சத்தை, தங்கள் பாசுரங்களின் பல் வேறு இடங்களில் பாடி இருக்கின்றார்கள். நாராயண பட்டதிரி தன்னுடைய நாராயணீயத்தில் இந்த விருத்தாந்தத்தை மிக உருக்கமாகப் பாடுகின்றார்.

?ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம் என்கிறார்களே, இது உண்மையா?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் அதனால் சிரமம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், பெண்(கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே ஆகும். அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி. அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது. ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பதே இதன் பொருள்.

பெண் மூலம் என்பது கன்னி மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள். இது அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். துர்காஷ்டமி அல்லது ஆயுதபூஜையோடு இணைந்து வருகிற நாள். இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கிய நாள் என்பதால் பெண் (கன்னி – புரட்டாசி) மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கு தோன்றியது. அதாவது புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் அசுர சக்திகளுக்கு எதிராக அதாவது அதர்ம வழியில் நடக்கும் அக்கிரமக்காரர்களை அடக்கும் விதமாக சிறந்த ஆற்றலைப் பெற்றிருப்பார்கள் என்பது அதன் பொருள். அதன் உண்மையான அர்த்தத்தை உணராமல் மூல நட்சத்திரத்தில் பெண்குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.

Tags : Subarama ,Tanji ,
× RELATED சம்சார சாகரத்தை தாண்டுவிக்கும் நாமம்