‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்பார்கள். பதவிக்கு மட்டுமல்ல, படிப்புக்கும் இது பொருந்தும்.
கல்வியறிவு பெருகப் பெருக பணிவும் அடக்கமும் பெருக வேண்டும். ‘தான் சிறந்த கல்விமான்’ என்றோ, ‘தான் சிறந்த கவிஞர்-புலவர்’ என்றோ, ‘தான் சிறந்த அறிஞர்’ என்றோ தருக்கித் திரிவதும் ஆணவம் கொள்வதும் ஆபத்திலும்
அவமானத்திலும் முடியும்.
“அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்”
என எச்சரிக்கிறார் வள்ளுவப்
பெருந்தகை.
‘அடக்கம் எனும் அரும்பண்பு ஒருவரை வானவர் நிலைக்கு உயர்த்திவிடும். தற்பெருமையும் ஆணவமும் இருளில் தள்ளிவிடும்.’அறிவுச் செருக்கு வேண்டாம், அது ஆபத்தானது என்று இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) எச்சரித்தார். மக்களிடையே புகழும் பெருமையும் பெற வேண்டும், பாராட்டைக் குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படும் அறிஞர்களுக்கு இறைவனிடம் எந்த நன்மையும் கிடைக்காது.ஒருமுறை நபிகளார்(ஸல்) கூறினார்:“ யார் மக்களிடம் காட்டுவதையும் அவர்களிடம் பாராட்டு பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு சொற்பொழிவாற்றுகிறாரோ, இறைவன் மறுமை நாளில் அவருடைய பகட்டையும் புகழாசையையும் அம்பலப்படுத்தும் இடத்தில் அவரை நிறுத்தித் தண்டித்து விடுவான்.”இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: “கற்றோரிடம் பெருமையடிப்பதற்காக அல்லது கல்லாதோரிடம் விவாதம் செய்வதற்காக அல்லது மக்களின் முகங்களை உங்கள் பக்கம் திருப்புவதற்காகக் கல்வியைக் கற்காதீர்கள். யார் அவ்வாறு செய்தாரோ அவர் நரகத்தில் இருப்பார்.”(ஸஹீஹுல் குதுபித்திஸ்ஆ, எண்கள் 37, 38) இப்போது ஒரு வினா எழலாம். “அறிவுத்துறையில் சிறப்பான சாதனைகள் புரிந்து புகழோ பெருமையோ அடைவது பாவச் செயலா?”
நிச்சயமாக இல்லை. கல்வியிலும் அறிவிலும் உயரே உயரே செல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அறிவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுதல், வாதத்தில் வீழ்த்துதல், பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தல், ஆணவத்துடன் தருக்கித் திரிதல் போன்றவற்றில் ஈடுபட்டால் துளி அளவும் புண்ணியம் கிடைக்காது. நரகம்தான் இருப்பிடம்.“படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனும் பாரதியாரின் வரிகளை யும் எண்ணிப் பார்க்க வேண்டும்.அதனால்தான் மார்க்கம் கூறுகிறது – “அறிவுச் செருக்கு ஆபத்து” என்று.ஆணவத்தைத் தவிர்த்து, ஆண்டவனுக்குப் பணிந்து, மக்களுக்கு நன்மை செய்ய கல்வியறிவைப் பயன்படுத்துவோம்.
– சிராஜுல் ஹஸன்
