×

பிஎம் கேர்ஸ் நிதி விவகாரம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி பற்றிய கேள்விகளுக்கு அனுமதியில்லை: மக்களவை செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ நிதி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தேசிய பாதுகாப்பு நிதியும் இயங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கொரோனா போன்ற அவசர கால சூழல்களை எதிர்கொள்ள ‘பிஎம் கேர்ஸ்’ எனும் பெயரில் பொது அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

இந்த நிதியானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் இயற்றப்பட்ட ஒன்றோ அல்ல என்பதால், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் இதுதொடர்பாக சிஏஜி தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப அனுமதி இல்லை என்று பிரதமர் அலுவலகம் சார்பில் மக்களவை செயலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், மக்களவை விதிமுறைகளின் கீழ் இந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகள் மற்றும் விவகாரங்களை அனுமதிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பூஜ்ஜிய நேரம் அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது இந்த நிதிகள் குறித்து தகவல் கோரப்பட்டால், இந்த விதிகளைப் பயன்படுத்தி அவற்றைத் தவிர்க்கலாம் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் கணக்கு அறிக்கையின்படி, பிஎம் கேர்ஸ் நிதியில் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,283.7 கோடி ரூபாய் இருப்பு இருந்ததாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் நிதி என்பது எந்த ஒரு அரசாங்கத்தாலும் நிர்வகிக்கப்படும் அமைப்போ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்போ அல்ல என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மூலம் சுமார் 2,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இந்த அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* நிதி வந்தது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிவுகளின் அடிப்படையில், ரூ.2,400 கோடிக்கும் அதிகமான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியைத் தவிர, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ.155 கோடியை பிஎம் ேகர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளன.

பி.எம். கேர்ஸ் நிதி என்றால் என்ன?
* 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்றுநோயின் போது அவசரநிலை மற்றும் துயர சூழ்நிலைகளைக் கையாள பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது.
* பின்னர் தொற்றுநோய் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சுகாதார உள்கட்டமைப்பு, பேரிடர் நிவாரணம், பிற அவசரகால உதவிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.
* இந்த நிதி பயன்பாடு குறித்து வெளிப்படைத்தன்மை, தணிக்கை முறை இல்லாததால் கேள்விகள் எழுந்துள்ளன.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து இது எவ்வாறு வேறுபட்டது?
* 1948 இல் உருவாக்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதி, பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டது
* தற்போது இயற்கை பேரழிவுகள், விபத்துகள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதி உதவியை வழங்குகிறது.
* பிஎம் கேர்ஸ் நிதியைப் போலவே, இது அரசாங்க பட்ஜெட் ஒதுக்கீடுகளை விட தன்னார்வ நன்கொடைகள் மூலமாகவும் நிதியளிக்கப்படுகிறது.
* தேசிய பாதுகாப்பு நிதி துணை ராணுவப் படைகள் உட்பட ஆயுதப்படைகளின் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனுக்கு உதவுகிறது. இந்த நிதி பிரதமர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Tags : Prime Minister's Office ,Lok Sabha Secretariat ,New Delhi ,Parliament ,
× RELATED சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு