வடமதுரை, பிப். 10: வடமதுரை அருகே காணப்பாடி ஊராட்சி கா.புதுப்பட்டியில் ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் சித்தரின் 85வது குருபூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து மாலையில் சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்களுக்கு மெகா புளியோதரை அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக 3,500 கிலோ அரிசி, 600 கிலோ கடலை பருப்பு, 360 கிலோ புளி, 45 டின் நல்லெண்ணெய் மற்றும் பல்வேறு வகையான மசாலா பொருட்கள் 350 கிலோ கொண்டு பெரிய பாத்திரங்களில் புளியோதரை தயார் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன்புள்ள பெரிய மைதானம், சாலையோரம், ஊர் மந்தை ஆகிய இடங்களில் பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு புளியோதரை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
