×

தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டி என்ற வரலாற்றை உடைக்க விரும்புகிறோம்: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

 

* வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியா? அல்லது கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பமா? கிருஷ்ணசாமி எந்த தொகுதியில் போட்டியிடுவார்?

தமிழகத்தில் நல்லாட்சி அமையவும், அந்த ஆட்சியில் புதிய தமிழகம் பங்கு பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சிந்தனையே எங்களுக்கு இல்லை. நிச்சயம் கூட்டணி அமைப்போம். தேர்தல் கூட்டணி மற்றும் எந்த தொகுதிகளில் போட்டி என்பதை வரும் பிப்ரவரி 12 முதல் 14ம் தேதிக்குள் கட்சியின் உயர்மட்ட குழுவே முடிவு செய்யும். அதுவரை காத்திருங்கள்.

* தேர்தல் கூட்டணியை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறதே?

தமிழகத்தில் இன்று வரை எந்தவொரு கூட்டணியும், தங்கள் கூட்டணியில் பங்கேற்க உள்ள கட்சிகளை தெளிவாக வரையறுத்து அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து எல்லா அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தையே நடத்தி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட பிரதமர் வருகைக்காக தலைவர்களை மேடையில் ஏற்றினார்களே தவிர, கூட்டணி கட்சிகள் குறித்து இறுதி முடிவுகளை எட்டவில்லை. புதிய தமிழகத்தை பொறுத்தவரை வரும் 14ம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அறிவித்து விடுவோம்.

* பொது தொகுதிகளிலும் போட்டி என்பதை புதிய தமிழகம் இப்போது வலுவாக முன்னிறுத்துவதன் அவசியம் என்ன?

சட்டசபை தேர்தல்களில் தனித்தொகுதிகளில் மட்டுமே புதிய தமிழகம் போட்டியிடும் என்ற வரலாற்றை உடைக்க விரும்புகிறோம். தனித்தொகுதிகளை தவிர்த்து பார்த்தோம் என்றால், எங்களுக்கு தென்மாவட்டங்களில் நெல்லை, நாங்குநேரி, கோவில்பட்டி, விளாத்திகுளம், கடையநல்லூர், சாத்தூர் என பல தொகுதிகளில் நல்ல வாக்கு வங்கி உள்ளது. அவற்றை கேட்டுப் பெற்று எங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை சில மாவட்டங்களில் தனித்தொகுதிகளில் நடத்தினாலும், நெல்லை மாவட்டத்தில் நெல்லையிலும், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையிலும் என பொது தொகுதிகளிலும் எங்கள் கூட்டங்கள் நடக்கின்றன.

* கிருஷ்ணசாமியையும், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. மாஞ்சோலையில் மீண்டும் தொழிலாளர்கள் வாழ்வு மலர வாய்ப்புள்ளதா?

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், கடந்த சில மாதங்களாகவே வாழ்வாதாரப் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற கூடாது எனக்கூறி புதிய தமிழகம் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையமும் அவர்களது நலன்காக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வனங்களில் தலைமுறை, தலைமுறையாய் வசிப்பவர்கள் 100 கி.மீட்டருக்கு அப்பால் தொழில் செய்தாலும், அவர்கள் வனங்களில் தொடர்ந்து வசிக்க சட்டங்கள் இடம் கொடுக்கின்றன. மனித உரிமை மீறல்களும், சட்டமீறல்களும் நடக்கும் நிலையில் தொடர்ந்து போராடுகிறோம்.

Tags : Puthiya Tamil Nadu Party ,Krishnasamy ,Tamil Nadu ,Puthiya ,
× RELATED சொல்லிட்டாங்க…