×

வாஸ்துக்காக மாறும் அதிமுக கட்சி ஆபீஸ்

 

தேர்தல் என்றாலே வாஸ்து, சாஸ்து, ஜோதிடம் என அரசியல் தரப்பினரின் ஆன்மிக நம்பிக்கை ஓங்கி ஒலிக்கும். இந்த நிலைப்பாட்டில் கடலூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் ஈடுபாடு சமீபகாலமாக சற்று அதிகமாகி இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. வழக்கமாக எம்.சி.சம்பத், ஜோதிடம், வாஸ்து, சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை உடையவர்.

கடந்த 2011, 2016 தேர்தல்களில் கடலூர் தொகுதியில் வெற்றிபெற்று, 10 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார். 3வது முறையாக 2021ல் மீண்டும் அங்கு போட்டியிட்ட அவர், திமுக ஐயப்பனிடம் தோல்வியடைந்தார். கடலூரில் அதிமுக கட்சிக்கென பிரத்யேகமாக தலைமை அலுவலகம் எதுவும் இல்லாத நிலையில் ஜெயலலிதா காலக்கட்டத்தில் பாதிரிக்குப்பம் பகுதியில் மாவட்ட கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டது.

2021 தேர்தலின்போது இங்கிருந்துதான் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் எம்.சி.சம்பத் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மீண்டும் கடலூரில் போட்டியிட ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பாதிரிக்குப்பம் பகுதியிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொள்ளாமல், புதுப்பாளையத்தில் புதிய அலுவலகம் அமைத்து தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஏனோ, பாதிரிக்குப்பம் அலுவலகத்தை சென்டிமென்டாக தவிர்த்து வருகிறார்.

இதுகுறித்து, அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘முன்னாள் அமைச்சர் வீட்டில் இருந்து கிளம்பினாலும் சரி, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் சரி நல்ல சகுணம் பார்த்துதான் கிளம்புவார். வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் போன்றவற்றிலும் நம்பிக்கை கொண்டவர். இந்த முறை எப்படியாவது கடலூரில் சீட்டு வாங்கி வெற்றிபெற வேண்டுமென களப்பணியாற்றி வருகிறார். சென்டிமென்டாக பாதிரிக்குப்பம் அலுவலகத்தை தவிர்த்துவிட்டு புதுப்பாளையம் பகுதியிலேயே பெரும்பாலும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்’’ என்றனர்.

Tags : AIADMK ,Vaastu ,Saastu ,Cuddalore ,AIADMK North District ,former ,Minister ,M.C. Sampath ,
× RELATED தலைநகர் சென்னைக்கே சவால் விடும்...