சென்னை: பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடக்கவுள்ளது. இது குறித்து சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஎம்.எல் விடுதலை கட்சிகள் சார்பிலான கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டியும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும் விபிஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒழித்துக்கட்டி, வேலை அளிப்பதை ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றி, 40 சதவிகித நிதிச் சுமையையும் மாநிலங்கள் மீது சுமத்துகிறது. .
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. ஒன்றிய அரசு, விக்சித் பாரத் சிக்ஷா அதிஸ்தான்-2025 என்ற சட்ட முன்வடிவையும் நிறைவேற்றியுள்ளது. இது கல்வித்துறை அதிகாரங்களை மத்தியில் குவிக்கவும் பெருமளவில் வணிகமயமாக்கவும் வழிவகுக்கிறது.
மோடி அரசின் இந்த அனைத்து கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்தி வரும் இயக்கங்களுக்கு வாலிபர், மாணவர், மாதர், மாற்றுத்திறனாளி போன்ற வெகுமக்கள் அமைப்புகளும் தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளன. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் அமைப்புகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்திய நாட்டின் வளங்களை சூறையாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்கவும் பிப்ரவரி 12 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
