×

சேப்பாக்கம் மைதானத்தில் திடீரென தடை விதிப்பா? ஐசிசி தொடர்களின்போது எப்போதுமே விசிலுக்கு அனுமதி கிடையாதுப்பா..சர்ச்சையாக்க முயன்ற தவெகவுக்கு சமூகவலைதளத்தில் பதிலடி

 

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு இப்போது திடீரென தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஐசிசி தொடர்களின்போது மைதானத்துக்குள் விசில் போன்ற இசைக்கருவிகளுக்கு எப்போதுமே அனுமதி கிடையாது என்பதே உண்மை. டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் போட்டிகள் இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானம் உள்ளிட்ட 5 மைதானங்களில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விகெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. முன்னதாக, இந்தப் போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் கொண்டுவரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை சிலர் அரசியல்ரீதியாக சர்ச்சையாக்க முயன்றனர். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி, ‘‘இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள்.

ஏன்? சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு ஜூரம் வந்துவிடுகிறதோ? விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கே போய் விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல். மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி கெடுபிடி காட்டும் இந்த நிர்வாக முறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் பிடுங்குவது விசிலை அல்ல, ரசிகர்களின் உரிமையை’’ என விமர்சித்துள்ளது.

ஆனால், உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் இசைக்கருவிகளை ரசிகர்கள் மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடைவிதிப்பது வழக்கமான கட்டுப்பாடுகளில் ஒன்று. விசிலும் இசைக்கருவிகள் என்ற வகைமையில் வரும் ஒன்றுதான். 2003 உட்பட பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் கூட விசில் உள்ளிட்ட இசைக்கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் போட்டியில் மைதானத்திற்குள் விசில் உள்ளிட்ட இசைக்கருவிகள் கொண்டு செல்லவதற்கு ஐசிசி தடை விதித்தது.

ஐசிசி உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் விளையாடும் வீரர்கள் மிகப்பெரிய அழுத்ததில் விளையாடுவார்கள். அந்த நேரத்தில் விசில் உள்ளிட்ட இசைக்கருவிகளில் இருந்து வெளிப்படும் சத்தம் வீரர்களின் கவனத்தைச் சிதற வைக்கும் என்பதற்காகவே மைதானத்துக்குள் அதைக் கொண்டுவர தடை விதிக்கப்படுகிறது. கூட்டம் நடத்தச் சட்டத்திற்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கும்போது அதைத் தங்களை முடக்கும் செயல்பாடு என தமிழக அரசை விமர்சித்தவர்கள்; தற்போது இதையும் அரசிற்கு எதிராகாச் சித்தரித்து வருகிறார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் பழமொழிக்குத் தற்காலத்தில் சிறந்த உதாரணம் தவெக ஆதரவாளர்கள் தான் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Tags : Chepauk ,ICC series ,Thaveka ,Chennai ,Chepauk stadium ,T20 World Cup series ,India ,Sri Lanka… ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பிப்.12ல் நாடு...