- முதல் அமைச்சர்
- துணை
- சென்னை
- சென்னை கார்ப்பரேஷன்
- சட்டசபை
- வால்டாக்ஸ் சாலை
- வி.ஓ.சி சாலை
- துறைமுக சட்டமன்றம்
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வால்டாக்ஸ் ரோடு, வ.உ.சி. சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி நிதி, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.43 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதனம் மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமாக முதல்வர் திருமண மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முதல்வர் திருமண மாளிகையில் துணை முதல்வர் 10 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திருமண மண்டபத்தில் அனைத்து வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் விடியல் பயணம் திட்ட மூலம் 960 கோடி நடைகளை மேற்கொண்டு பெண்கள் பயனடைந்துள்ளனர். மகளிர் விடியல் பயணம் திட்டம் மூலம் 900 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயை மகளிர் சேமிப்பது பெருமிதம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாயை முதல்வர் வழங்கி வருகிறார். காலை உணவு திட்டம் மூலம் 22 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். மீண்டும் திமுக அரசு ஆட்சி அமைப்பது உறுதி. மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் முதலமைச்சர் அமரப் போகிறார், திராவிட மாடல் அரசின் 2.0 தொடரப்போகிறது. திருமணத்திற்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
