தேவகோட்டை: அரசு வேலை வாங்கி தருவதாக தேவகோட்டை வாலிபரிடம், ரூ.4.15 லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த போலி பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிதம்பரநாதபுரம் முதல் வீதியை ேசர்ந்தவர் ரமேஷ்குமார் (32). இன்ஜினியரிங் படித்துள்ளார்.
இவருக்கு பேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வளம்பட்டியைச் சேர்ந்த சுமதி (எ) முத்துலெட்சுமி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முத்துலெட்சுமி, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து கொண்டு நட்பினை தொடர்ந்தார். தனக்கு அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலக உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சுமதி தெரிவித்தார்.
செயற்பொறியாளராக அரசு வேலை வாங்கித்தருகிறேன் என ரமேஷ்குமாரிடம் முத்துலெட்சுமி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷ்குமார், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வெவ்வேறு தவணைகளில் முத்துலெட்சுமியிடம் ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், ஒரிஜினல் சான்றிதழ்கள், லேப்டாப், பைக் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். ஆனால் ரமேஷ்குமாருக்கு வேலை வாங்கி முத்துலெட்சுமி கொடுக்கவில்லை.
கொடுத்த பணம் மற்றும் சான்றிதழ்கள், லேப்டாப், பைக் ஆகியவற்றை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து விசாரித்த பிறகே, முத்துலெட்சுமி போலி இன்ஸ்பெக்டர் என தெரியவந்தது. இதுபற்றி ரமேஷ்குமார், சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் திண்டுக்கல்லில் இருந்த முத்துலெட்சுமியை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
